Published : 19 Jan 2014 02:22 PM
Last Updated : 19 Jan 2014 02:22 PM
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
29,600 பேர் தேர்ச்சி
ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (முதல் தாள்) 2,60,000 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை (2-ம் தாள்) 4 லட்சம் பேரும் எழுதினர். இதில், முதல் தாளில் 12,596 ஆசிரியர்களும் 2-ம் தாளில் ஏறத்தாழ 17 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களை நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையையே இந்த தடவை இடைநிலை ஆசிரியர் நியமனத்திலும் கடைப்பிடிக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் பிளஸ்-2 மதிப்பெண், பட்டப் படிப்பு, பி.எட். மதிப்பெண், இடைநிலை ஆசிரியராக இருந்தால் ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு மதிப்பெண் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடக்கம்
இதற்கிடையே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நாளை (திங்கள்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்துக்கு ஒரு மையம் என்ற அடிப்படையில் 32 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அழைப்புக்கடிதம், சுயவிவர படிவம், அடையாளச்சான்று, கல்வி, சாதி சான்றிதழ்கள், சான்றொப்பம் பெறப்பட்ட அவற்றின் நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
கண்காணிப்பு குழு
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆய்வுசெய்வதற்காக இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில், தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.) இயக்குனர் ஏ.சங்கர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை ஆகியோரும், இணை இயக்குனர்கள் ஏ.கருப்பசாமி (பணியாளர்), எஸ்.கார்மேகம் (மெட்ரிக்), வி.பாலமுருகன் (மேல்நிலைக்கல்வி), எஸ்.உமா (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்), டி.உமா (ஆசிரியர் தேர்வு வாரியம்) உள்பட 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர்.
பெரிய மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரியும், சிறிய மாவட்டங்களாக இருந்தால் இரண்டு மூன்று மாவட்டங்களுக்குச் சேர்ந்து ஒரு அதிகாரியும் பணிகளை ஆய்வுசெய்வார்கள். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதுடன் பிளஸ்-2, பட்டப் படி, பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களும் பதிவுசெய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT