Published : 27 May 2017 09:04 AM
Last Updated : 27 May 2017 09:04 AM

‘மக்களால் இந்த அரசு... மக்களுக்காகவே இந்த அரசு’- முதல்வர் கே.பழனிசாமி அரசின் 100 நாள் சாதனை மலர் வெளியீடு

முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசின் 100 நாள் சாதனை மலர் நேற்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசு 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. மே 23-ல் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானதால், புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பிப்ரவரி 5-ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் அதிமுகவில் நடந்த குழப்பங்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதல்வராக கே.பழனிசாமி பொறுப்பேற்றார்.

அவர் முதல்வராக பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் முடி வடைந்தது. இதையடுத்து, பல் வேறு துறைகள்தோறும் கே.பழனி சாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த சாதனை மலர் செய்தித் துறையால் தயாரிக்கப்பட்டது. முதல்வராக கே.பழனிசாமி பொறுப் பேற்றதும் மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் வகையில் 500 கடைகள் மூடல் உள்ளிட்ட 5 அறிவிப்புகளை வெளியிட்டார், அது தொடர்பான தகவல் சாதனை மலரில் இடம் பெற்றுள்ளது. அதேபோல, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

‘நிலையான ஆட்சி - நிரந்தர வளர்ச்சி’ என்ற தலைப்பில் தயாரிக் கப்பட்டுள்ள இந்த சாதனை மலர், இது தொடர்பான குறும்படத்தின் குறுந்தகடு ஆகியவற்றை தலை மைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட் டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங் கோட்டையன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அத்துடன் முதல்வர் கே.பழனிசாமியின் ‘எழுச்சிமிகு உரைகள்’ என்ற பெயரில் அவரின் பேச்சுக்கள் அடங்கிய நூலும் வெளியிடப்பட்டது.

நிறம் மாற்றம்

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது தமிழக அரசின் சாதனை மலர்கள், அவரது உரைகள், 110 விதியின் கீழான அறிவிப்புகள் என அனைத்து தொகுப்புகளின் முகப்பு அட்டைகள், உள்பக்கங்கள் கரும்பச்சை மற்றும் இளம்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட முதல்வர் கே.பழனிசாமி அரசின் சாதனை மலர் நீல நிறத்தில் இருந்தது. ‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்’ என்ற வாசகத்தை ஜெயலலிதா தனது உரையில் பயன்படுத்துவார். தற்போது, வெளியிடப்பட்ட சாதனை மலர், முதல்வரின் உரைகள் அடங்கிய புத்தகத்தில் ‘மக்களால் இந்த அரசு.. மக்களுக்காகவே இந்த அரசு’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x