Last Updated : 02 Apr, 2017 09:05 AM

 

Published : 02 Apr 2017 09:05 AM
Last Updated : 02 Apr 2017 09:05 AM

ஏரிகளில் நீர்மட்டம் குறைவதால் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு: விவசாய கிணறுகளில் கூடுதல் தண்ணீர் எடுக்க திட்டம்

கல்குவாரி நீர், போரூர் ஏரி நீரும் சென்னைக்கு வருகிறது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்இருப்பு குறைவாக இருப்பதால் புறநகர்ப் பகுதி விவசாயக் கிணறுகளில் இருந்து கூடுதலாக 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. செம்பரம்பாக்கம் அருகே உள்ள சிக்கராயபுரம் கல்குவாரி நீர், போரூர் ஏரி நீரும் இம்மாத இறுதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. இவற்றில் தற்போது 1,269 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 6,887 மில்லியன் கனஅடி இருப்பு இருந்தது. இதனால், சென்னை மக்களுக்கான தினசரி குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. 74 லட்சம் மக்கள்தொகை கொண்ட சென்னை மாநகரில் தற்போது தினமும் 55 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஏரிகள் மட்டுமல்லாது, கடல்நீரை குடிநீராக்கும் 2 யூனிட்களில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர் வீதம் தினமும் 200 மில்லியன் லிட்டர் சென்னைக்கு கிடைக்கிறது. இதுதவிர திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள 300 விவசாயக் கிணறுகள், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்தும் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

பருவமழை குறைவு, கடும் வெப்பம் போன்ற காரணங்களால் சென்னை ஏரிகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, பிற நீர்ஆதாரங்களில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

ஏரிகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு 50 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யமுடியும். விவ சாயக் கிணறுகளில் இருந்து தினமும் 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இம்மாத இறுதியில் இருந்து இதை 95 மில்லியன் லிட்டராக அதிகரிக்க உள்ளோம். நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 50 மில்லியன் முதல் 70 மில்லியன் லிட்டர் வரை எடுக்கப்படுகிறது.

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, ஒரு கல்குவாரியில் இருந்தும், போரூர் ஏரியில் இருந்தும் தண்ணீர் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரும், போரூர் ஏரி தண்ணீரும் மக்கள் பயன்பாட்டுக்குத் தகுதி யானதுதான் என்று நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.

சிக்கராயபுரம் கல்குவாரி நீர் மற்றும் போரூர் ஏரி நீர் இம்மாத இறுதியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக விநியோகிக் கப்படும். மற்ற மாவட்டங்களைவிட சென்னை மாநகரில் குடிநீர் விநியோகத்தில் எந்த சிரமமும் இல்லை. மக்களின் தேவைக்கேற்ப குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு இன்னும் 2 மாதங்களுக்கு தட்டுப்பாடு வராது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

குவாரி, ஏரியில் பணிகள் தீவிரம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சிக்கராயபுரம் கல்குவாரி உள்ளது. அங்கிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர், செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, குடிநீர் தேவைக்கு வழங்கப்படும். அந்த 2 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிப்பதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுவிட்டதால் குழாய் பதிக்கும் பணி விரைவில் தொடங்கும்.

போரூர் ஏரியில் எடுக்கப்படும் தண்ணீர் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x