Published : 04 Sep 2016 09:12 AM
Last Updated : 04 Sep 2016 09:12 AM
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சாராய வியாபாரி ஸ்ரீதர். இவர் தனது பெயரிலும், தனது உறவினர்களின் பெயரிலும் வைத்திருந்த ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை நேற்று முன்தினம் முடக்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவித்து, ஒட்டுமொத்த அமைதிக்கு சவாலாக இருப்போரின் பட்டியலை தமிழக போலீஸார் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தற்போது துபாயில் உள்ள ஸ்ரீதரின் சொத்து முடக்கப் பட்டுள்ளது. விரைவில் அவர் இன்டர்போல் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஸ்ரீதர் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்ரீதர் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் திருபருத்திக் குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிப்பு வரவில்லை. இதைத் தொடர்ந்து நண்பர்களுடன் ஊர் சுற்றியுள்ளார். பெற்றோர் கண்டித்தும் பலன் இல்லை.
இந்நிலையில் 1990-ல் சாராய வியாபாரி சக்கரவர்த்தியின் நட்பு ஸ்ரீதருக்கு கிடைத்துள்ளது. அவருக்கு ஸ்ரீதர் நம்பிக்கைக்கு உரியவர்போல் காட்டிக்கொண்டுள்ளார். இதனால், சக்கரவர்த்தி தனது மகளையே திருமணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஸ்ரீதர் சாராய வியாபாரியாக உருவெடுத்தார். தனது சாராய வியாபாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தினார்.
போலீஸாருக்கு உதவி
கைது நடவடிக்கை என்று வந்த உள்ளூர் போலீஸாருக்கு தேவையான பணம் உள்ளிட்ட அனைத்து உதவிக ளையும் தாராளமாக செய்துள்ளார். இதனால், ஸ்ரீதரின் சாராய கடத்தலை போலீஸார் கண்டும் காணாமலும் இருந்துள்ளனர். தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக எரிசாராயம் (ஸ்பிரிட்) கடத்திவரத் தொடங்கினார். காஞ்சிபுரம் மட்டும் இல்லாமல் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் எரிசாராய தொழிலை விரிவு செய்தார். நாளடைவில் சாராய விற்பனையில் புதுச்சேரி வரை மொத்த விற்பனை யாளராக உருவெடுத்தார்.
தொழில் போட்டியாளர்கள், எதிரிகள் என்று யார் தனக்கு எதிராக உருவெடுத்தாலும் அவர்களை தன் பாதையில் இருந்து நீக்கிவிட்டுதான் அடுத்த வேலையை பார்ப்பார். ஸ்ரீதருக்கும் ரவுடி தேவராஜ் என்பவ ருக்கும் பகை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார் ஸ்ரீதர். அப்போது, சென்னை செங்குன்றம் அருகே அரசுப் பேருந்தில் போலீஸ் பாது காப்புடன் பயணித்துக்கொண்டு இருந்த தேவராஜ் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்தார்.
கூலிப்படை மூலம் மிரட்டல்
இவரை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய முடியாது. கேட்கும் நிலங்களை கொடுக்காதவர்கள் கூலிப்படை மூலம் மிரட்டப்படுவார்கள். இவருக்கு பயந்து போலீஸுக்கும் புகார் கொடுக்க மக்கள் அச்சப்படுவார்கள். ஸ்ரீதருக்கு ஆதரவாக சில போலீஸார் இருந்ததால் தங்கு தடையின்றி மிரட்டல் தொழிலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 1999-ல் ஸ்ரீதர் மீது வழக்கு பதியப் பட்டது. இந்த வழக்கில் 2003-ல் காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தால் ஸ்ரீதர் விடுவிக்கப்பட்டார். இதற்கு நடுவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேச நாயக்கர் என்பவருடன் சாராய தொழிலில் போட்டி ஏற்பட்டது. கணேச நாயக்கரை கொலை செய்ய முயன்றதாக 2002-ல் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர், குண்டர் சட்டத்தில் முதல்முறையாக சிறை சென்றார்.
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் இவர் மீது ‘ஹிஸ்டரி ஷீட்’ (குற்றவாளியின் பின்னணி தகவல்) திறக்கப்பட்டு போலீஸாரின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டார். குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வந்த ஸ்ரீதரின் சாராய சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரக் காரணம் அந்த சமயத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய ஒருசில போலீஸ் அதிகாரிகள்தான். சாராய விற்பனையில், ஸ்ரீதரை தொழில் முறையாக எதிர்த்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனால், ஸ்ரீதரின் சாராய சாம்ராஜ்யம் தங்கு தடையின்றி வளர்ந்துள்ளது.
2007-ம் ஆண்டுகளில் ஸ்ரீதருக்கு தொழில் போட்டியாக புஞ்சை அரசந்தாங்கல் கிராம சாராய வியாபாரி கிருஷ்ணன் என்பவர் இருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து காஞ்சிபுரத்தில் 2 முறையும், திரு வண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி பகுதியில் 3 முறையுமாக கிருஷ்ணனைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்தன. 5-வது முயற்சி யில் 2010-ல் கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டார். அந்த சமயம், ‘பாது காப்பாக’ வேலூர் சிறையில் இருந்தார் ஸ்ரீதர். டெல்டா மாவட்ட கூலிப்படை இந்த கொலையை செய்ததாக போலீஸ் தெரிவித்தது.
சிறையில் வளர்ந்த நட்பு
ஸ்ரீதருடன் சேர்ந்து அந்த சமயம் சிறையில் இருந்தவர் டெல்டா மாவட்டத் தைச் சேர்ந்த கேபிரியல் என்பவர். கிருஷ்ணன் கொலைக்குப் பிறகு ஸ்ரீதர் - கேபிரியல் நட்பு மேலும் நெருக்க மானது. வேலூர் சிறையில் இருந்து கேபிரியலும் ஸ்ரீதரும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். சிறை மாற்றினாலும் இருவரின் நட்பு தொடர்ந்தது. ஸ்ரீதரின் ரியல் எஸ்டேட் தொழில் தடையில்லாமல் நடக்க கேபிரியலின் ஆட்களும், ஸ்ரீதரின் உறவினரான அரசு என்பவரும் தொடர்ந்து செயல்படுவதாகவும் போலீஸார் தகவல் திரட்டினர்.
மிரட்டல் மூலமாக பல சொத்துகள் ஸ்ரீதர் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் பதியப்பட்டன. கேபிரியல் சிறையில் இருக்க ஸ்ரீதர் சில ஆண்டு களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்தாலும் தனது போட்டியாளர்களால், தன்னால் பாதிக்கப்பட்டவர்களால் எந்நேரமும் பழிவாங்கப்படலாம் என்ற எச்சரிக்கை யுடன் இருந்துள்ளார். இந்நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நேபாளம் வழியாக துபாய் சென்றார். கடைசி நேரத்தில் இதனை மோப்பம் பிடித்த தமிழக போலீஸார், இன்டர் போல் போலீஸ் உதவியுடன் ஸ்ரீதரை கைது செய்தனர். பின்னர் அவர் விடு விக்கப்பட்டார். மீண்டும் அங்கு இருந்த வாறே ரியல் எஸ்டேட் தொழிலை தடையில்லாமல் செய்து வந்தார்.
அடுக்கடுக்கான வழக்குகளைக் காரணம் காட்டி ஸ்ரீதரை இந்தியாவுக்கு கொண்டுவர காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், ஸ்ரீதரின் விசுவாசிகள் பலர் போலீஸில் இருந்ததால் அவரை பிடிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்றார்.
குற்ற வழக்குகளில் சிக்கி குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வந்த ஸ்ரீதர் எதற்கும் பயப்படாமல் இருந்துள்ளார். அதுவே அவரது வளர்ச்சிக்குக் காரணம். காவல்துறையினரை கையில் வைத்துக் கொண்டு தனக்கு இருந்த தொழில் போட்டியாளர்களை ஸ்ரீதர் விரட்டிய டித்துள்ளார். 2012-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலர் அம்பேத்கர் வளவன் (எ) நாராயணன் பேருந்து நிலையம் எதிரே கொலை செய்யப் பட்டார். இதிலும் ஸ்ரீதர் குற்றவாளி யாக சேர்க்கப்பட்டார். முக்கியமான ஒருவரை முடிக்க நினைத்தால் சட்ட சிக்கலை தவிர்க்க கைதாகி சிறைக்கு சென்று விடுவதுதான் ஸ்ரீதரின் வழக்கம்.
என்கவுன்ட்டரில் இருந்து தப்பியவர்
ஸ்ரீதரின் செயல்பாட்டால் வெறுத்துப் போன போலீஸார் அவரை என்கவுன்ட்டர் மூலம் தீர்த்துக்கட்ட 2006-ல் முடிவு செய்தனர். அதன்படி, ஸ்ரீதரை காரில் பின்தொடர்ந்தனர். இதைத் தெரிந்துகொண்ட ஸ்ரீதர் சாமர்த்தியமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தினுள் போலீஸாரின் பாதுகாப்பை மீறி நுழைந்தார். இதைத் தொடர்ந்து அவரை மத்திய பாதுகாப்புப் படை போலீ ஸார் கைது செய்தனர். மத்திய பாது காப்புப் படை போலீஸாரிடம் பிடிபட்டு என்கவுன்ட்டரில் இருந்து தப்பிப்பது என்ற அவரின் எண்ணம் நிறைவேறியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பர்னிச்சர் கடை வைக்கப்போவதாக திமுக பிரமுகர் ஒருவரிடம் காஞ்சி புரத்தில் இடத்தை வாடகைக்கு எடுத்தார் ஸ்ரீதர். ஆனால் அதில் செம்மரக்கட்டை கடத்தல் தொழில் செய்து வந்தார். நிலங்களை அபகரிப்பதில் ஸ்ரீதர் சற்று வித்தியாசமானவர். நிலத்தின் சொந்தக் காரர்களுக்கு ஏதாவது ஒரு சிறு தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி விடுவார். ஸ்ரீதரின் பின்னணி தெரிந்தவர்கள் என்பதால் யாரும் காவல் நிலையம் செல்வதில்லை.
ஸ்ரீதரை பற்றி எந்த தகவலை விசாரித் தாலும், அவரின் ஜாதகத்தையே ஸ்ரீதரின் ஆட்களுக்கு அனுப்பி வைத்துவிடும் விசுவாசிகள் காவல்துறையில் உள்ளனர். துபாயில் இருந்து அண்ணன் பேசுகிறார் என்று சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஸ்ரீதரின் ஆட்கள், போனை கொடுப்பார்கள். ஸ்ரீதர் குரலைக் கேட்டதும் எதிர்முனையில் இருப்பவர்கள் நடுங்கிவிடுவார்கள். காஞ்சிபுரத்துக்கு சில குறிப்பிட்ட நபர்களுக்கு வரும் துபாய் அழைப்புகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தாலே பாதிக் குற்றங்களை குறைத்துவிடலாம் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொத்தை வயதான பெண் ஒருவரை மிரட்டி எழுதிக்கொண்டது, காந்தி ரோட்டில் அன்பழகன் என்பவரின் ரூ.8 கோடி மதிப்புள்ள பாத்திரக்கடை, காரை என்னும் இடத்தில் சுப்பிரமணி என்பவரின் 15 ஏக்கர் நிலத்தை மிரட்டி வாங்கியது, ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஒருவரின் மனைவியின் பெயரில் காஞ்சிபுரத்தில் இருந்த 5 வீடு மற்றும் வேலூரில் இருந்த 4 வீடுகளையும் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டது, வேடல் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்வதாக சொல்லி 10 பேரிடம் ரூ.2 கோடி மதிப்புள்ள 30 ஏக்கர் நிலத்தை மிரட்டி வாங்கியது என இன்னும் பல சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளி களாக அருள், தசரதன், தினேஷ், தீனதயாளன், செந்தில் ஆகியோர் இருந்துள்ளனர். ஸ்ரீதர் இவர்களிடம் தான் இன்றளவும் தனக்கு ஆகவேண்டிய வேலைகளை கொடுப்பார். இவர்கள் அந்த இடத்துக்குச் சென்று துபாயில் இருந்து அண்ணன் பேசுகிறார் என்று சொல்லி போனை கொடுப்பார்கள். இன்றைக்கும் துபாயில் இருந்தபடியே ஸ்ரீதர் தனது வேலைகளை கச்சித மாக செய்து முடிக்கிறார் என்று கூறப் படுகிறது.
ஸ்ரீதரின் கூட்டாளிகள் பாஸ் போர்ட்டை சோதனையிட்டால் அவர்கள் வெளிநாடு களுக்கு சென்று வரும் விவரங்கள் தெரியும். அவர்கள் ஏன் வெளிநாடு சென்று வந்தார்கள். யாரை சந்தித்தார்கள் என்ற விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிடும். துபாயில் இன்டர்போல் போலீஸாரால் கைதானபோது அங்கு உள்ள சிறையில் தொலைபேசி வசதி இருப்பதைப் பயன்படுத்தி அங்கு இருந்தே இந்தியாவுக்கு போன் செய்து மிரட்டுவார் என்றும் கூறுகின்றனர்.
வ. செந்தில்குமார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆள் பலம், பண பலத்துடன் தனது சாராய சாம்ராஜ்யத்தை விரிவாக்கிய ஸ்ரீதரின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் போலீஸாரால் தடுக்க முடியவில்லை. குண்டர் சட்டம், என்கவுன்ட்டர் என எல்லா முயற்சிகளிலும் தப்பிய ஸ்ரீதரை சட்டத்தால் வளைக்க போலீஸார் முடிவு செய்தனர்.
முதல்கட்டமாக ஸ்ரீதரின் சொத்துகளை பட்டியலிட்ட போலீஸார் அதை வருமான வரித்துறை நடவடிக்கைக்கு ஓராண்டுக்கு முன் அனுப்பினர். அதனைத் தொடர்ந்தே அமலாக்கத் துறையினர் ஸ்ரீதர் மற்றும் அவரது பினாமி பெயரில் உள்ள ரூ.150 கோடி சொத்துகளை முடக்கியுள்ளனர். இனி அவரது சொத்துகளை யாரும் வாங்கவும் விற்கவும் முடியாது.
துபாயில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் ஸ்ரீதர் தனது சொத்துகளை மீட்க நீதிமன்றத்துக்கு கட்டாயம் வரவேண்டிய நிலையை போலீஸார் ஏற்படுத்தியுள்ளனர். மேலும், ஸ்ரீதரின் பெயரில் உள்ள சொத்துகளை முடக்கவும் சிவகாஞ்சி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே மிரட்டி வாங்கிய சொத்தை தனது மகள் பெயரில் பத்திரவுப்பதிவு செய்ய ஸ்ரீதர் ஏற்பாடு செய்தார். இதைத் தெரிந்துகொண்ட போலீஸார் ஸ்ரீதரின் மகளை கைது செய்து அவரது பாஸ்போர்ட்டை முடக்கினர். ஆனால், தான் கல்லூரி மாணவி என்றும் தனக்கும் தனது தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தப்பிவிட்டார். ஸ்ரீதரனின் பெரும்பாலான சொத்துகள் அவரது மனைவி பெயரிலும் தம்பி செந்தில் பெயரிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீதருக்கு செல்போன்தான் முதல் ஆயுதம். பணத்தால் எந்த ரவுடி கும்பலையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடுவார். அதேபோல, எதிர் முகாமில் தனக்கு எதிராக தீட்டப்படும் திட்டங்களையும் முன்கூட்டியே தெரிந்துகொள்வதில் கில்லாடி. சிறையில் இருந்தாலும் செல்போன் மூலமாக வெளியில் நடக்கும் அத்தனை அசைவுகளுக்கும் உத்தரவு பிறப்பித்து வந்தார். தற்போது துபாயில் இருந்தபடியே அதை செய்துவருகிறார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீதரின் குற்றப் பட்டியல்
ஸ்ரீதர் மீது 5 கொலை, 8 கொலை முயற்சி, 4 ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, நில உரிமையாளர்களை மிரட்டுதல், அடிதடி, செம்மரம் கடத்தல் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT