Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

3 மாவட்டங்களில் 30 நாட்கள் மீன்பிடி தொழிலை நிறுத்த முடிவு: பிப்ரவரி 10-க்கு பிறகு இலங்கை செல்கிறது தமிழகக் குழு

சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையின் நியாயங்களை இலங்கை மீனவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைப்பதற்காக அடுத்த மாதம் தமிழக மீனவர்கள் குழு அங்கு செல்கிறது.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இதுவரை மூன்று முறை நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவை எட்டாமல் முறிந்துபோன நிலையில், திங்களன்று சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை நம்பிக்கை யூட்டும்படி அமைந்ததாக தமிழக மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள்.

எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்கள், இழுவலையை பாய்ச்சி மீன்களை அடியோடு வழிப்பதால் தங்களின் மீன்வளம் அழிக்கப்படுவதாக கூறும் இலங்கை மீனவர்கள், இழுவலையை தடை செய்ய வேண்டும் என்பதைத்தான் தற்போதைய பேச்சுவார்த்தையிலும் முக்கிய அம்சமாக முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்த நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் கூறியதாவது:

தமிழகத்தில் இழுவலையை நம்பி ஏராளமான விசைப்படகு மீனவர்கள் உள்ளனர். அவர்கள் மாற்றுத் தொழில்களை தேட அவகாசம் தேவை என்று சொன்னோம். இலங்கை மீனவர்கள் அதை ஏற்கவில்லை. 2010-ல் அவர்கள் இங்கு வந்து பார்த்த பிறகுதான் உண்மையை உணர்ந்தார்கள்.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சூரை மீன் பிடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள் என 2007-ல் அரசுக்கு நாங்கள் ஒரு திட்டம் கொடுத்தோம். மாவட்டத்துக்கு தலா 500 விசைப்படகுகளை அரசிடம் ஒப்படைப்பதாக எழுதிக் கொடுத்திருக்கிறோம். மீன்பிடி தடைக் காலத்தை 45-லிருந்து 60 நாட்களாக உயர்த்த கோரிக்கை வைத்திருக்கிறோம். இவை அனைத்துமே இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை குறைக்கும். இழுவலை மீன்பிடித்தலை நிறுத்திக்கொள்ள எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டோம்.

முதலில் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ‘எங்களுக்காக தமிழகத்தில் எத்தனையோ பேர் தீக்குளித்ததையும் போராடிய தையும் நாங்கள் நன்றியுடன் நினைக்கிறோம். ஆனால், முப்பதாண்டுகளாக நாங்கள் படும் கஷ்டம் தீர எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று இலங்கை மீனவர்களும், ‘உடனடியாக மாற்றுத் தொழிலை தேடுவதற்கு பல லட்சம் ரூபாய் தேவைப்படும். அவ்வளவு பெரிய தொகைக்கு நாங்கள் எங்கு போவோம்?’ என்று நமது மீனவர்களும் உணர்ச்சிகரமாக தங்களது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

முடிவில், ஒன்றரை பக்க அளவில் தீர்மானங்களை எழுதி இருதரப்பும் கையெழுத்திட்டோம். பேச்சுவார்த்தை விவரங்களை தங்களது மீனவர்களுக்கு தெரிவித்து முடிவெடுப்பதாக இலங்கை மீனவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பிப்ரவரி 10-ம் தேதியிலிருந்து ஒரு மாத காலம் நாகை, புதுகை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை நிறுத்தி வைக்கவும், தமிழக மீனவ பிரதிநிதிகள் இலங்கை சென்று அங்குள்ள மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை புரியவைப்பது எனவும் முடிவானது. அதற்கு முன்பு இரு தரப்பிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மொத்தத்தில், இந்தமுறை நடந்த பேச்சுவார்த்தை நம்பிக்கை தரும் நல்ல தொடக்கமாக அமைந்தது.

இவ்வாறு அருளானந்தம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x