Published : 11 Nov 2013 01:25 PM
Last Updated : 11 Nov 2013 01:25 PM

முழு அடைப்புக்கு ஆதரவு: மாணவர்களுக்கு வைகோ அழைப்பு

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் முழு அடைப்புக்கு மாணவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது அநீதி என்பதையும், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்காதது மனிதகுலத்தின் மனசாட்சி தமிழர்களைப் பொறுத்தமட்டில் செத்துப்போய்விட்டது என்பதைத் தெரியப்படுத்தவும், தாய்த் தமிழகத்து மக்கள் தங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்காக கிளர்ச்சி செய்கிறார்கள் என்பதையும், தமிழ்ச் சாதி நாதியற்றுப்போய்விடவில்லை என்பதையும் உலகத்துக்கு உணர்த்தவும், இந்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தவும் நவம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.

அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் மாணவர்களுக்கத்தான் இருக்கிறது.கடந்த மார்ச் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் தான் ஈழத் தமிழர் துன்பமும் துயரமும் உலகத்துக்குத் தெரிந்தது.

இந்தியாவில் பிற மாநிலங்களிலே வாழுகிற பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஈழத் தமிழர்கள் படுகொலையைத் தெரிவிப்பது மாணவர்களின் கையில்தான் உள்ளது.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை, அந்த உண்மைகளை உலகத்தின் கண்களுக்கு புலப்பட விடாமல் குழிதோண்டிப் புதைப்பதுதான், இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டம்.

உலகில் எந்த ஒரு இனத்துக்கும் இப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தால் அந்த இனத்தின் இளந்தலைமுறையினர் எரிமலையாக வெடித்திருப்பார்கள். பிரளயமாகச் சீறி இருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் பித்தலாட்டத்தால், இளந்தலைமுறையினர் முழு உண்மை நிலையை அறியாத சூழலில் இருப்பது மனதுக்கு மிகவும் வேதனை தருகிறது. இளைஞர்களும், இளநங்கைகளும்தான் நீதிக்காக, உரிமைக்காக அச்சமின்றிப் போராடும் ஈட்டிமுனைகளாவார்கள்.

எனவே, மாணவக் கண்மணிகளைப் போராட்டத்துக்கு அழைக்கிறேன். அரசியல் எல்லைகளைக் கடந்து உடன் பிறவாத சகோதரனாக அழைக்கிறேன். முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளின் பெயரால் அழைக்கிறேன். நாளைய முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x