Published : 21 Sep 2016 04:51 PM
Last Updated : 21 Sep 2016 04:51 PM

மதுரை அதிமுகவில் 69 நிர்வாகிகள் திடீர் மாற்றம்: பகுதி செயலாளர்கள், எம்எல்ஏ கட்சி பதவி பறிப்பு

மதுரை மாநகர் அதிமுகவில் 2 பகுதிச் செயலர்கள், 11 வட்டச் செயலாளர்கள் உட்பட 69 பேர் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். எம்எல்ஏ.வின் பதவி பறிப்பு, தேமுதிகவிலிருந்து வந்தவர், சினிமா பைனான்சியர் உள்ளிட்ட பலருக்கும் பதவிகள் வழங்கப் பட்டுள்ளதால் அதிமுகவின ரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி அதிமுகவில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மாநகர் பொறுப்பில் உள்ள 69 பேரின் பதவிகளை மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் எம்எல்ஏ, பகுதிச் செயலாளர் உள்ளிட்ட பலரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ள தகவல் வெளி யானதும், மதுரை அதிமுகவி னரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

எஸ்.ராஜலிங்கம், பெ.சாலைமுத்து ஆகியோரின் பகுதிச் செயலாளர் பதவி பறிக்கப் பட்டுள்ளது. ராஜலிங்கத்தின் ஆதரவாளர் எம்.எஸ்.செந்தில் குமார், அமைச்சர் செல்லூர் கே. ராஜுவின் ஆதரவாளர் முத்துராமலிங்கபுரம் கருப்பசாமி ஆகியோர் புதிய பகுதி செயலா ளராகி உள்ளனர். இதேபோல, வார்டுகள் 89, 100, 1, 19, 15, 17, 86, 51, 73, 63, 7 ஆகிய 11 வார்டு செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த வார்டுகளில் ஜெய்ஹிந்த்புரம் ரமேஷ், பைகாரா டிட்டோகுமார், கூடல்நகர் செந்தில்செல்வன், சொக்கலிங்கநகர் நாகராஜன், புதுஜெயில் ரோடு விருமாண்டி, எல்லிஸ் நகர் ஜெயபாண்டி, காஜிமார் தெரு சையது ஹாரூன், இஸ்மாயில்புரம் ஆர்.சரவணன், கான்பாளையம் பாலயோகி, செல்லூர் மகேந்திரன் ஆகியோர் புதிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணனின் வட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தேமுதிக விலிருந்து வந்த அரவிந்தன் மற்றும் சினிமா பைனான்சியர் ஜி.என். அன்புசெழியன் ஆகியோருக்கு மாவட்ட அளவில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், 69 பேரின் பதவிகள் பறிப்பு, மாற்றங்கள், பெ.சாலைமுத்துவின் பகுதிச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: 3 வார்டுகளில் செயலாளர்கள் இறந்துவிட்டனர். 2 பேருக்கு வயதாகி விட்டது. தேர்தல் நேரத்தில் கட்சியின் செயல்பாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் விருப்பப்படியே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செல்லூர் கே. ராஜூ தேர்தலில் மேற்கு தொகுதியில் போட்டியிட்டபோது சரியாக பணியாற்றாதது, கட்சிப் பணத்தை செலவிடாதது, வடக்குத் தொகுதியில் கட்சியின் தோல்விக்கு காரணமானவர்கள் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோர்தான் பதவிகளை இழந்துள்ளனர் என்றார்.

அமைச்சரும், மாநகர் மாவட்ட அதிமுக செயலருமான செல்லூர் கே.ராஜூ கூறும்போது, ‘முதல்வர் ஜெயலலிதாதான் மாற்றங்களை செய்துள்ளார். அவர் எதைச் செய்தாலும் காரணம் இருக்கும். சரியாக பணியாற்றாதோர், தவறு செய்ததாக புகார்கள் வந்தாலும், போலீஸாரின் அறிக்கை பெற் றுத்தான் நடவடிக்கை எடுக்கப் படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றம் நடந்துள்ளது. சாலை முத்துவுக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை. கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்வேன் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x