Published : 10 Jun 2016 05:46 PM
Last Updated : 10 Jun 2016 05:46 PM
உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராம ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பில் பின் தங்கிய நிலையில் பயின்ற மாணவ, மாணவியருக்கு ஆசிரியை கற்பூரத்தால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில், தலைமையாசிரியர் வரதராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை வைஜெயந்தி மாலாவை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது.இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 53 மாணவ, மாணவிகள் பயிலுகின்றனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இயங்கி வந்த பள்ளியில் நேற்று 4-ம் வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியை வைஜெயந்திமாலா என்பவர், பாடம் தொடர்பாக மாணவர்களிடம் சில வினாக்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அவர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காத மாணவியர் சுப்புலட்சுமி, ப்ரீத்தி, அனிதா, மாணவர்கள் சுரேஷ்ராஜ், ஹரிகிருஷ்ணன் உட்பட 15 மாணவர்களை கண்டித்து பிரம்பால் அடித்ததாகவும், மாணவ, மாணவியர்களின் காலில் கற்பூரத்தை ஏற்றி ஆசிரியை வைஜெயந்திமாலா சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவ,மாணவிகள் காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீக் காயத்துடன் வீட்டுக்குச் சென்ற மாணவர்கள் பெற்றோர்களிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை வழக்கம்போல் பள்ளி திறந்தபோது, பள்ளியின் முன் திரண்ட பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.அதன்பின் மாணவ,மாணவிகள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ஆசிரியை மற்றும் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்டக் கல்வி அலுவலர் இளங்கோவனுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ஆசிரியை வைஜெயந்திமாலா மற்றும் தலைமையாசிரியர் வரதராஜன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மாணவ, மாணவியர்களையும், பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது ஆசிரியை குறித்து பெற்றோர்கள் பல புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் மாணவ,மாணவியரிடம் மனித உரிமையை மீறும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் அளித்தப் புகாரின் பேரில் ஆசிரியை வைஜெயந்திமாலாவை உளுந்தூர்பேட்டை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT