Published : 28 Apr 2017 09:51 AM
Last Updated : 28 Apr 2017 09:51 AM

பெரியார் பல்கலை. புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற்ற பாராலிம்பிக் வீரர் மாரியப்பனின் வாழ்க்கை வரலாறு நிறுத்திவைப்பு

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர் மாரியப்பனின் வாழ்க்கை வரலாறு சேலம் பெரியார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலை.யில் 2017-18-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ள இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை, மூதறிவியல், எம்.பில்., பவுண்டேஷன் பேப்பர்ஸ், சான்றிதழ் படிப்புகள் (டிப்ளமோ) போன்றவற்றுக்கான புதிய பாடத் திட்டம் பல்கலை. நிர்வாகம் மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பவுண்டேஷன் பேப்பர்ஸ் எனப் படும் படிப்புகளில் ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி, மலையாளம், சமஸ்கிருதம், தமிழ், யோகா ஆகிய படிப்புகள் உள்ளன.

இவை பெரும்பாலும் 2 ஆண்டு படிப்புகள். இதில், ஆங்கில பாடத்தில் முதல் ஆண்டுக்கான இரண்டாம் பருவத்தில் ‘யூனிட்-3 : வாழ்க்கை வரலாறு’ என்ற தலைப்பின் கீழ் ‘லதா மங்கேஷ்கர், மாரியப்பன்’ ஆகிய 2 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முந்தைய பாடத்திட் டத்தில் ‘வாழ்க்கை வரலாறு’ என்ற தலைப்பின் கீழ், ‘அன்னை தெரசா, அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர்’ ஆகியோரின் வாழ்க்கை வரலாறு பாடமாக இடம்பெற்றிருந்தது. தற்போது, பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சேலம் மாரியப்பன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு பாடமாக இடம்பெறச் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் காடையாம் பட்டி வட்டம் வடகம்பட்டி கிராமத் தைச் சேர்ந்தவர் மாரியப்பன். பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் இயங்கும் தனியார் கல்லூரி ஒன்றில் தற்போது இறுதியாண்டில் படித்து வருகிறார். இவ்வாறு அவர் படித்துக்கொண்டு இருக்கும் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலேயே அவரது வாழ்க்கை வரலாறு இடம் பிடித்திருப்பது பெருமைக்குரியது. உலக அரங்கில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை நிமிரச் செய்து தங்கம் வென்று திரும்பிய வீரருக்கான அங்கீகாரமாகவும் இதைக் கருதலாம்.

“மாரியப்பனின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டமாக ஆக்கப் பட்டபோதும் அந்த அங்கீகாரம் உறுதியாகவில்லை. சில நிர்வாகக் காரணங்களால் அவரது வாழ்க்கை வரலாற்றைப் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது வருத்தமளிக்கிறது. இதன் பின்னணியில் நிர்வாகக் காரணங்களின்றி வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்றும் கருதத் தோன்றுகிறது” என்று சிலர் கூறினர்.

இதுகுறித்து, பெரியார் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, ‘‘பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாணவர் மாரியப்பனின் வாழ்க்கை வரலாறு பெரியார் பல்கலை.யின் ஆங்கிலத் துறை சார்பில் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்டது உண்மைதான். அதேநேரம், பாடத்திட்டத்தை இறுதி செய்த குழுவினர், குறிப் பிட்ட சில காரணங்களுக்காக மாரி யப்பன் வாழ்க்கை வரலாற்றை அடுத்து வரும் ஆண்டுக்கான செமஸ்டர்களில் ஒன்றில் இடம் பெறச் செய்யலாம் என கூறினர். இதனால், தற்போது வெளியிடப் பட்ட புதிய பாடத்திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்படும். தற் காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ள மாரியப்பன் வாழ்க்கை வரலாறு பின்னர் வரும் ஆண்டுகளில் பாடத் திட்டமாக அமையும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x