Published : 16 Jan 2014 07:24 PM
Last Updated : 16 Jan 2014 07:24 PM

திருச்சியில் பொங்கல் விழா: வெளிநாட்டினர் பங்கேற்பு

திருச்சி அருகே மேலூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழக கிராமிய சூழலில் மாட்டு வண்டிகளில் பயணித்தும், பொங்கல் வைத்தும் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் சுற்றுலாப் பொங்கல் விழா ஏதேனும் ஒரு கிராமத்தில் கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு இந்த விழா ஸ்ரீரங்கம் அருகிலுள்ள மேலூர் கிராமத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்த மலேசியா, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, லண்டன், போலந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த 82 சுற்றுலாப் பயணிகள் சிறப்புப் பேருந்துகள் மூலம் மேலூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

கிராம எல்லையில் பேருந்து நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். அங்கு திரண்டிருந்த கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி கிராமத்துக்கு விருந்தினர்களாக வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மாலை அணிவித்தும், நெற்றியில் திலகமிட்டும் வரவேற்றனர்.

பின்னர், மேள தாளங்கள் முழங்க காளைகள் பூட்டிய மாட்டு வண்டிகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏறிக் கொண்டனர். இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீமுரளிதரனும் வண்டியில் ஏறிக் கொள்ள , கிராமத்து மண் சாலையில் மாட்டு வண்டிகள் பயணிக்கத் தொடங்கின.

கிராம மக்கள் புடை சூழ ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டருக்கு மேல் மாட்டு வண்டிகளில் பயணித்து மேலூரில் உள்ள அய்யனார் கோயிலுக்கு வந்தனர். கோயில் வளாகத்தில் கிராமப் பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. வண்ண நட்சத்திரங்களாக மின்னிய கோலங்களை கண்டு வியந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், எப்படி இதைப் போட்டீர்கள் என ஆச்சர்யத்துடன் கேட்டனர்.

இதைத் தொடர்ந்து கோயிலில் கோ பூஜை நடைபெற்றது. அங்கேயே அமைக்கப்பட்டிருந்த அடுப்புகளில் சுற்றுலாப் பயணிகள் பொங்கல் வைத்தனர். பொங்கல் பானையிலிருந்து பொங்கல் பொங்கி வந்த போது, அதை கண்ட வெளிநாட்டுப் பெண்கள் மகிழ்ச்சி பொங்க கிராம மக்களுடன் சேர்ந்து பொங்கலோ பொங்கல் என கோஷங்களை எழுப்பி மகிழ்ந்தனர். கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிளி ஜோதிடம், கைகளில் மருதாணி இடும் நிகழ்ச்சி, ஸ்ரீரங்கம் ரேவதி முத்துசாமி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, மயிலாட்டம், பாம்பு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தஞ்சாவூர் ஏ.என்.பி. குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள், கிராமத்தினர் பங்கேற்ற மயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம், பானை உடைக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. இவைகளை கண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். இதுபோன்ற விழாவை இதுவரையில் தாங்கள் கண்டதில்லை எனவும், மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

இந்த விழாவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ராமமூர்த்தி, துணை இயக்குநர் (தோட்டக் கலை) பி. சந்திரசேகர், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் பவானி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x