Published : 03 Nov 2013 06:17 PM
Last Updated : 03 Nov 2013 06:17 PM

இசைப்பிரியா படுகொலையை கண்ட பிறகும் இலங்கை செல்ல வேண்டுமா?- பிரதமருக்கு கருணாநிதி கேள்வி

இசைப்பிரியாவின் படுகொலையைக் கண்ட பிறகும், காமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கை செல்ல வேண்டுமா? என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், "விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12-வயது மகன், பாலச்சந்திரனைச் சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான சிறுவர்களையும், பெண்களையும், முதியோர்களையும் கொன்றழித்த சரித்திரம் காணாத கொடுமைகளுக்கு ராஜபக்‌ஷே சர்வதேசச் சட்டப்படி பொறுப்பேற்று, உலக நாடுகளுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்.

பிரபாகரனின் மகனாகப் பிறந்த பச்சிளம் பாலகன், பாலச்சந்திரன் தன்னைக் கொலை செய்யப்போகிறார்கள் என்று புரிந்துகொள்ளக் கூட முடியாத பருவத்தில், அவன் மார்பிலே ஐந்து குண்டுகளைப் பாய்ச்சினார்களே, குலை நடுங்கும் அந்தக் கோரக் கொடுமைகளைக் கண்டோம்; கதறினோம்!

லண்டனைத் தலைநகராகக் கொண்ட 'சேனல்-4' தொலைக்காட்சி நிறுவனம் எத்தனையோ ஆபத்துக்கிடையே படம் எடுத்து, தயாரித்த அந்தக் கொடுமையான காட்சிகள்தான் எத்தகையவை?

பாலச்சந்திரன் கைக்கும் வாய்க்கும் இடையே ரொட்டித் துண்டுடன் இருந்ததையும், அடுத்தப் படத்தில் அவன் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கிப் பிணமாகக் கிடந்ததையும் விளக்கிடும் காட்சி, தாயும் குழந்தையும் ஒன்றாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த காட்சி; அப்பாவிப் பெண்கள் ஆடைகள் நீக்கப்பட்டு, நிர்வாண நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் காட்சி; ஆண்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, கைகளைப் பின்னால் கட்டி, முதுகிலே சுட்டுக் கொல்கின்ற காட்சி; விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ் என்பவர் முகம் சிதைந்த நிலையில் கொல்லப்பட்டு பிணமாகக் கிடக்கின்ற காட்சி; அந்தக் கொடுமைகளைக் கண்டோம்.

இப்போது, பெண்புலி இசைப்பிரியாவை - அவள் வயதையொத்த மற்ற பெண்கள் எல்லாம் எத்தனையோ கனவுகளில் மூழ்கித் திளைத் திருந்த நேரத்தில், 'தமிழ் ஈழம்' எனும் தகத்தகாயக் கனவை நெஞ்சத்திலே தாங்கித் திரிந்த அந்தப் பெண் குயிலை, சிங்கள ராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சியையும் காண வேண்டிய கொடுமைக்கு நாம் ஆளாக்கப்பட்டோம்.

இங்கிலாந்தின் சேனல் - 4 என்ற டெலிவிஷன் நிறுவனம்தான் இலங்கை ராணுவத்தின் இத்தகையப் போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது இப்படிப்பட்ட நெஞ்சம் குலுங்குகின்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டு, சிங்களக் காடையர்களின் கொடுமைகளை உலகத்தின் கண்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

இசைப்பிரியா போரின்போது கொல்லப்பட்டதாக ராஜபக்ஷே அரசு இதுவரை சொல்லி வந்த கதையை, ஏமாற்று வித்தையை வெளிப்படுத்துகின்ற வகையில் இசைப்பிரியா கொலை செய்யப் பட்ட காட்சிகள் இன்று ஆதாரத்தோடு வெளிவந்துள்ளன. ஏற்கனவே பல தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள சேனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் தற்போது இசைப்பிரியா தொடர்பான காட்சிகளையும் படமாக்கி வெளியிட்டுள்ளது.

அந்தக் காட்சியில் வயல்வெளி போன்றதொரு பரந்த நிலப்பரப்பு வழியாக இசைப்பிரியா தப்பிச் செல்ல முயலும்போது, இலங்கை ராணுவ வீரர்கள் அவளைப் பிடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். ஈரமான தரையிலே அவளை உட்காரவைக் கிறார்கள். அவளை நோக்கிச் செல்லும் ராணுவ வீரர்கள் ஒரு வெள்ளைத் துணியைக் கொடுத்து, அவளைப் போர்த்தி, அழைத்துச் செல்கின்ற காட்சியும் அதிலே இடம்பெற்றுள்ளது. அப்போது ராணுவ வீரன் ஒருவன், இசைப் பிரியாவைக் காட்டி, இவர்தான் பிரபாகரனின் மகள் என்று கூறுகிறான். இசைப்பிரியா அதனை மறுக்கும் குரல் அந்தவீடியோ காட்சியில் கேட்கிறது.

இசைப்பிரியா பாடுகின்ற காட்சி ஒன்றும் ஒளிபரப்பாகிறது. எப்போதும் பேனா, கேமராவுடன் சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் இசைப்பிரியா, தன்னுடைய தற்காப்புக்காக ஒரு துப்பாக்கியைக் கூட வைத்துக் கொள்ளமாட்டார் என்று அவருடைய நெருங்கிய தோழி ஒருத்தி ஏற்கனவே கூறியிருந்தார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது, சேனல் - 4 நிறுவனம், பிரபாகரனின் மகன் செல்வன் பாலச்சந்திரன் பற்றிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது. தற்போது இலங்கை யிலேயே “காமன்வெல்த்” நாடுகளின் மாநாடு நடைபெறவிருக்கும் நேரத்தில், இசைப்பிரியா தொடர்பான காட்சிகளை, அதே சேனல் - 4 நிறுவனம் உலகம் முழுவதிலும் வெளிக்கொணர்ந்து நம்மையெல்லாம் தேம்பிப் புலம்ப வைத்துள்ளது.

இந்தக் கொடுமையான காட்சியை நம்முடைய நாட்டுப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், ஏன் அந்தக் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வேண்டுமென்று இன்னமும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் கண்ட பிறகும், அந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறார்களா?

ஈழத்தில் நடந்த இனத் துடைப்பு நடவடிக்கைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், வரலாறு கண்டிராத போர்க் குற்றங்களுக்கும் சுதந்திரமானதும் - நம்பகமானதுமான - சர்வதேச விசாரணை வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ளும் வகையில்,ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காகச் சர்வதேசக் கருத்தை ஒன்று திரட்டிடும் முயற்சியைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வோம்.

இசைப்பிரியா சின்னாபின்னப்படுத்தப்பட்ட சாட்சியங்களைக் கண்ணுற்ற பிறகாவது, அதற்குக் காரணமான சிங்கள அரசைக் கண்டித்திடும் வகையிலும், நெஞ்சை உலுக்கிடும் இந்த நிகழ்வுக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், இலங்கையிலே நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இங்குள்ள தமிழர்களும், உலகெங்குமுள்ள தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

என்ன செய்திடப் போகிறது இந்திய அரசு? இசைப்பிரியாவுக்கு நடைபெற்ற கொடூரத்திற்குப் பிறகும் இந்தியா இலங்கை செல்ல வேண்டுமா? இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா?" என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x