Published : 28 Feb 2014 03:15 PM
Last Updated : 28 Feb 2014 03:15 PM
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்ட எஸ்.பி. சம்பத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி யின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 13 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த கைது சம்பவத்துக்கு முன்னதாகவே கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதை தமிழக ‘க்யூ’ பிரிவு போலீஸார் கண்டுபிடித்து 21 பேரிடம் விசாரணையும் நடத்தினர்.
சென்னை க்யூ பிரிவு எஸ்.பி.யாக இருந்த சம்பத்குமார், போலி பாஸ்போர்ட் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தியபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கு கிரிக்கெட் சூதாட்டத் தில் தொடர்பிருப்பதை முதலில் கண்டுபிடித்தார். இதுபற்றி 2 வாரங்கள் விசாரணை நடத்தி, சூதாட்டத்தில் தொடர்புடைய பலரைக் கண்டுபிடித்து ஒரு பட்டியலையும் தயார் செய்திருந்தார்.
இதையறிந்த பல புரோக்கர்கள், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மகேந்தர்சிங் ரங்கா என்பவரை அணுகினர். நகைக்கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்யும் மகேந்தர்சிங் ரங்கா, பல போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். தன்னை அணுகிய புரோக்கர்களிடம் பல லட்சங்களை வசூல் செய்த மகேந்தர்சிங், அதில் சில லட்சங்களை எஸ்.பி. சம்பத்குமாரிடம் கொடுத்து, சிலரை சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்துள்ளார்.
போட்டுக் கொடுத்த புரோக்கர்
இந்நிலையில், இந்த வழக்கு க்யூ பிரிவு போலீஸில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதால் எல்லாம் தலைகீழாகி விட்டது. பணம் கொடுத்தும் கைதானதால் ஏமாற்றமடைந்த கவுதம் மோகன் என்ற புரோக்கர், சிபிசிஐடி போலீஸில் புகார் கொடுக்க, மகேந்தர்சிங் ரங்கா சிக்கினார். அவர் கொடுத்த வாக்குமூலத் தில், ‘‘கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து சிலரது பெயரை நீக்குவதற்காக க்யூ பிரிவு எஸ்.பி. சம்பத் குமார் கூறியதன் பேரில், ஆயில் வரதன் என்பவரிடம் ரூ.10 லட்சமும், ரைஸ்மில் ஓனர் ஜெயச்சந்திரன் என்ப வரிடம் ரூ.5 லட்சமும் கொடுத்தேன்’’ என தெரிவித்திருந்தார்.
சம்பத்குமார் சஸ்பெண்ட்
அதைத் தொடர்ந்து சம்பத்குமாரை திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பி.யாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சம்பத்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருச்சி ரயில்வே எஸ்.பி.யாக பணியாற்றி வந்த சம்பத்குமாரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் விசாரணை
ஐபிஎல் சூதாட்டம் குறித்து நீதிபதி முட்கல் தலைமையிலான மூன்று பேர் கமிட்டி தனியாக விசாரணை நடத்தியது. இந்த கமிட்டி இரு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ஐபிஎல் விவகாரம் தொடர்பாக சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்றும், இது தொடர்பாக மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.
அதனடிப்படையில், ஐபிஎல் சூதாட்டத் தில் ஈடுபட்டதாக சென்னையில் கைது செய்யப்பட்ட விக்ரம் அகர்வால், உத்தம்லால் ஜெயின் ஆகியோரிடமும், சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் உள்பட 13 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT