Published : 23 Mar 2017 12:38 PM
Last Updated : 23 Mar 2017 12:38 PM
கடந்த 20 ஆண்டுகளாக குளத்துக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாமல் வெறும் குப்பைமேடாகக் காணப்பட்ட பாணாதுறை குளம், தூர் வாரப்பட்டு, முன்மாதிரி குளமாக மாற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 40 குளங்கள் இருந்ததாக 1936-ம் ஆண்டு நில அளவைத் துறையின் வரைபடங்களில் உள்ளது. தற்போது, பல இடங்களில் குளம் இருந்ததற்கான அடையாளங்கள் கூட இல்லாமல் காணப்படுகிறது. அதேபோலத் தான், கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான பாணதீர்த்த குளம் முன்பு இருந்துள்ளது. நாளடைவில் இந்தக் குளம் தூர்ந்துபோனதால், அந்த இடம் குப்பை மேடாக, குளத்துக்கான அடையாளங்கள் எதுவுமின்றி இருந்தது.
இந்தக் குளத்தைத் தூர்வார வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட நீர்நிலைகள் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மகாமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்தில் உள்ள குளங்களைத் தூர்வார சிட்டி யூனியன் வங்கி ரூ.1 கோடி நன்கொடை வழங்கியது. அதைக்கொண்டு, பாணாதுறை குளமும் முழுமையாகத் தூர் வாரப்பட்டு, நான்கு புறமும் நடைபயிற்சிக்கான பாதை, அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டதுடன், நான்கு கரைகளின் சுவர்களிலும் அழகிய ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன.
இதுகுறித்து, இந்த திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுத்த கும்பகோணம் நகராட்சி பொறியாளர் ராஜகோபால் கூறியபோது, “பாணாதுறை குளம் 1300 சதுரமீட்டர் பரப்பளவில் முழுமையாகத் தூர் வாரப்பட்ட பின், குளத்தில் தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. குளத்தின் நான்கு கரைகளும் அழகுபடுத்தப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குளத்தைத் தூர்வாரி, அழகுபடுத்த ரூ.1.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள மற்ற குளங்களுக்கு, இந்தக் குளம் இனி முன்மாதிரியாக இருக்கும்” என்றார்.
இதுகுறித்து, தஞ்சை மாவட்ட நீர்நிலைகள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரவிமலநாதன் கூறியபோது, “பாணாதுறை குளத்தை மீட்டுருவாக்கம் செய்ததுபோல, நகரில் உள்ள இதர குளங்களையும் மீட்க வேண்டும். அப்படிச் செய்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாது. இந்தக் குளத்தை, இனி நகராட்சி தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இதற்கு பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT