Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

அழகிரியை சாய்த்து, அவர் மீது விஜயகாந்துக்கு சிவப்புக் கம்பளம்- மதுரை தி.மு.க-வினர் கருத்து

மு.க.அழகிரியைச் சாய்த்துவிட்டு அவர் மீது விஜயகாந்த்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள் என்று மதுரை தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2000-ம் ஆண்டு மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, மதுரையை ரண களப்படுத்தினர். இத்தனைக்கும் அப்போது அழகிரி எந்தப் பொறுப் பிலும் இல்லை. இப்போது தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மதுரைப் பக்கம் எந்தச் சலனமும் இல்லை. அழகிரியைவிட கட்சியும் பதவியும் முக்கியம் என சொல்லாமல் சொல்லி இருக்கிறது மதுரை தி.மு.க.

அழகிரி விசுவாசிகள் கருத்து

அழகிரி மீதான நடவடிக்கை குறித்து அவரது விசுவாசிகள் சிலரிடம் கருத்துக் கேட்டோம். மிசா பாண்டியன் (மதுரை மாநகர் முன்னாள் பொருளாளர்): “தலைவரைச் சந்திச்சுட்டு அண்ணன் கோபமாக வந்தார்னு சொன்னாங்க. என்ன ஏதுன்னு எதுவும் தெரியலை. அவரை போன்லயும் பிடிக்க முடியல. பேராசிரியர் அறிக்கையை வெச்சுப் பார்க்கும்போது, விஜய காந்த்துடனான கூட்டணிக்காகவே, அண்ணன் மீது நடவடிக்கை எடுத்தி ருக்கிறார்கள் என்று புரிகிறது. அண்ணனை வீழ்த்தி அவர் மீதே விஜயகாந்த்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறார்கள்’’.

இசக்கிமுத்து (முன்னாள் மாநகர் அவைத் தலைவர்): கட்சி யின் பொது நலனுக்காக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அதனால், அதை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. 1969-ல் அண்ணா இறந்தபோது, கலைஞர் கையில் தி.மு.க. வர வில்லை என்றால், எப்படி கட்சி அன்றே அழிந்திருக்குமோ அதேபோல, 1993-ல் வைகோ ம.தி.மு.க.வை ஆரம்பித்தபோது, அழகிரி மட்டும் இல்லாவிட்டால், தென்மாவட் டங்களில் திமுக அழிந்திருக்கும். எனவே, அழகிரியையும் ஸ்டாலி னையும் தலைவர் சமரசம் செய்து வைக்க வேண்டும்’’.

தானும் கெட்டு கட்சியையும் கெடுத்தார்

பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி கூறுகையில், “மு.க.அழகிரி நல்லவராக இருந்தாலும் அறிவாளிகளையும், கொள்கைவாதிகளையும் அவர் நம்பவில்லை. கட்சியின் வரலாறு தெரியாத அடவாடிப் பேர்வழிகள் சிலரை பக்கத்தில் வைத்துக் கொண்டதுதான் அவர் செய்த இமாலய தவறு.

மாநகராட்சி தேர்தலில் உதயசூரியனை தோற்கடித்த ஒருவரின் உறவுக்கு மேயர் பதவி வாங்கிக் கொடுத்தார். தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சிக்கி கட்சிக்கும் தலைமைக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.

சினிமா ஆர்வத்தில் இருந்த தன் மகனை தேவையில்லாமல், கிரானைட் தொழிலில் இறக்கி கட்சியின் பெயரையும் சேர்த்துக் கெடுத்தார். அடாவடிப் பேர்வழிகளின் பேச்சைக் கேட்டு, வில்லங்கச் சொத்துகளை வாங்கி, மனைவியின் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவாக காரணமானார். தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தும், கட்சி நிகழ்ச்சிகளிலோ, போராட்டங்களிலோ, பொதுக் கூட்டங்களிலோ ஒருமுறைகூட கலந்து கொண்டதில்லை.

ஆக, அவர் செய்கிற ஒவ்வொரு தவறும் கட்சியையும் சேர்த்துப் பாதிப்பதால் தலைமையின் இந்த நடவடிக்கை சரியானதே” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x