Published : 17 Jan 2017 09:16 AM
Last Updated : 17 Jan 2017 09:16 AM

அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் கைது: போலீஸ் சமாதான முயற்சியை ஏற்க மக்கள் மறுப்பு- தொடரும் பதற்றம்

சீறிப் பாய்ந்த காளைகள்; போலீஸ் தடியடி; ஒரு லட்சம் பேர் திரண்டனர்

மதுரை அருகே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அவர்களுக்கு உதவிய ஊர் மக்கள் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி அளவில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து போலீஸாரின் கைது நடவடிக்கையை கண்டித்து ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். எனவே சாலை மறியலை கைவிட்டு அறவழியில் போராட்டத்தைத் தொடருங்கள். காவல்துறை ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும். சாலை மறியலை கைவிடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினார்.

ஆனால், போலீஸ் சமாதான முயற்சியை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

முந்தைய செய்தி:

முன்னதாக திங்கள்கிழமை காலை, அலங்காநல்லூரில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இளைஞர்கள் காளைகளை அவிழ்த்துவிட்டதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் உருவானது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுப்பதற்காக 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வாடிவாசலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விழிப்புடன் காவல் இருந்தனர். காளை வளர்ப்போரை வீட்டுக் காவலில் வைத்திருந்தனர்.

எனினும், போலீஸாரின் இந்த கண்காணிப்பை மீறி நேற்று முன்தினம் முதலே தமிழகம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களில் இருந்து பெண்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் அலங்கா நல்லூரில் திரண்டனர். இதை யடுத்து, நேற்று கடையடைப்புப் போராட்டம் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதுடன் இளைஞர்கள் வாடிவாசல் முன்பாக குவிந்து பீட்டா அமைப்பைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, வாடிவாசல் அருகே உள்ள முனியாண்டி கோயிலுக்கு அழைத்து வரப்பட்ட காளைகளை, ஆர்வ மிகுதியில் சில இளைஞர்கள் அவிழ்த்துவிட்டனர். கூட்டத்தை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிய தால் பெரும் பதற்றம் நிலவியது.

அப்போது சுற்றுவட்டார கிராமங் களைச் சேர்ந்த இளைஞர்கள் வாடிவாசலை நோக்கி காளை களை ஊர்வலமாக அழைத்து வந்தனர். போலீஸாரை மீறி அவர்கள் செல்ல முயன்றதோடு, காளைகளையும் அவிழ்த்து விட்டனர்.

இதையடுத்து, நிலை மையை கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். கூட்டம் நாலாபுறமும் சிதறியதால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போலீஸார் தொடர்ந்து அலங்கா நல்லூர் தெருக்கள், சாலைகளில் கண்ணில் படுவோரை எல்லாம் தடியடி நடத்தி விரட்டினர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அலங்காநல்லூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் எழவில்லை எனவும், ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிரடிப் படையினர் முகாம்

இதற்கிடையே அலங்கா நல்லூரில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து நகராமல் அங்கேயே தங்கியதால் அதிரடிப் படையின ருடன் எஸ்.பி.விஜயேந்திர பிதாரி சம்பவ இடத்திலேயே முகாமிட்டார். போராட்டக்காரர் களுடன் போலீஸாரும், அரசு அதிகாரிகளும் அவ்வப்போது சமரச பேச்சு நடத்தினர். கோரிக்கை குறித்து அரசுக்கு கடிதம் அனுப்பு கிறோம் என போராட்டக்காரர் களிடம் உறுதியும் அளித்தனர்.

ஆனாலும், அவர்கள் வாடிவாசல் வழியாக குறைந்தது 5 காளைகளையாவது அவிழ்த்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என போலீஸார் மறுத்துவிட்டனர்.

போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அதிரடிப் படையின ருடன் எஸ்.பி. விஜயேந்திர பிதாரி தொடர்ந்து சம்பவ இடத்திலேயே முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். இரவு முழுவதும் போராட்டம் நீடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x