Published : 16 Jul 2016 01:55 PM
Last Updated : 16 Jul 2016 01:55 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் முக்கிய நதியான் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் பகுதியில் தடுப்பணை அமைக்க தமிழக அரசு ஏற்கனவே முடிவெடுத்தது. கடந்த 2013-14 ம் ஆண்டில் ரூ.32.90 கோடி மதிப்பில் இருபுறமும் 6 ஷட்டர் களுடன் 175 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் புதிய தடுப்பணையை பொதுப்பணித் துறையின் நீர் வளத்துறை கட்டியது.
திருக்கண்டலம் மற்றும் அழிஞ் சிவாக்கம், அத்தங்கிகாவனூர், ஆரிக்கம் பேடு, சேத்துப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காக 160 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைப்பதற்காக இந்த தடுப்பணை அமைக்கப்பட்டது.
இச்சூழலில், தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழை, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதனால், நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. அதன் காரணமாக பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் மற்றும் மழை நீரால் கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி வினாடிக்கு சுமார் 85 ஆயிரம் கன அடி நீர் திருக்கண்டலம் தடுப்பணைக்கு வந்தது.
ஆனால் நீரின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், தடுப்பணையின் இடதுபுற கரைப்பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் பகுதி இடிந்து விழுந்தது. இதனால், தடுப்பணை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்து, நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. அதேபோல் கடந்த டிசம்பர் 3-ம் தேதியும் திருக்கண்டலம் தடுப்பணை பகுதியில் வினாடிக்கு சுமார் 94 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் வந்தது. இதனால் ஏற்கெனவே இடிந்து விழுந்த கரையின் பக்கவாட்டு சுவர் முழுமையும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் தடுப்பணையின் இடதுபுற பகுதியில் ஷட்டர் ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஷட்டர் பகுதி உள்வாங்கியது. தடுப்பணையின் சுவர் பகுதி 30 மீட்டர் தூரத்துக்கு உடைந்தது.
திருக்கண்டலம் அருகே தாமரைப்பாக்கத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டு கட்டி பல ஆண்டுகளாகியும் பலமாக உள்ள நிலையில், அதற்கு மிக அருகே உள்ள திருக்கண்டலம் தடுப்பணை கட்டி முடித்து ஓராண்டாகி, திறப்பு விழாக் கூட காணாத நிலையில் உடைந்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி வெளியான, ‘தி இந்து’ வில் விரிவாக எழுதியிருந்தோம். இதை யடுத்து அன்றைய தினமே நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச் சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தடுப்பணையை நேரில் ஆய்வு செய்தார். இதுபற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடுப்பணையை சீரமைக்கும் பணி தொடங்கும் எனவும் பொதுப்பணித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 8 மாதங்கள் கடந்தும் இன்று வரை ஒரு எந்தப் பணியும் நடக்க வில்லை. பலவீனமான, தரமற்ற கட்டு மானத்தால் தடுப்பணை உடைந்தது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கையோ, கட்டுமான ஒப்பந் ததாரரிடம் கேள்வியோ கூட கேட்க வில்லை என்றும் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தென்மேற்கு பருவ மழை விரைவில் தொடங்கவுள்ளது. கனமழையாக பெய்யும் பட்சத்தில் திருக்கண்டலம் தடுப்பணை தடயமே இல்லாமல் காணாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின் றனர். இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘திருக்கண்டலம் தடுப்பணை பாதிப்புக்குள்ளானது பற்றிய ஆய்வு எல்லாம் முடிந்ததால், தடுப்பணை சீரமைப்பது தொடர்பான கருத்துருவை அரசுக்கு அனுப்பி உள்ளோம். அரசின் அனுமதி கிடைத்த உடன் விரைவில் தடுப்பணை சீரமைக்கும் பணி தொடங்கும்’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT