Published : 14 Dec 2013 10:16 AM
Last Updated : 14 Dec 2013 10:16 AM

தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்படவுள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்களுக்கு கையடக்க, வண்ண, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வரும் ஜனவரியில் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், மெல்லிய காகிதத்தில் அச்சிடப்பட்ட, லேமினேட் செய்யப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இவற்றுக்கு பதிலாக, நவீன வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, “பான்கார்டு” மற்றும் வங்கி ஏ.டி.எம். கார்டுகளை போல், எளிதில் உடையாத, தண்ணீரில் அழியாத மற்றும் வண்ண புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டைகள், 8.6 செ.மீ. நீளமும்,5.4 செ.மீ. அகலமும் உடையதாக இருக்கும்.

இதனை, அமல்படுத்த நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் துறை அலுவலகங்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்திலும், வண்ண புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புதிய அட்டைகளை அச்சிடுவதற்கான தனியார் நிறுவனத்தினை டெண்டர் மூலம் கண்டறிய எல்காட் நிறுவனத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் துறையினர், தி இந்து நிருபரிடம் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் புதிதாக சேரும் வாக்காளர்களுக்கு, புதிய, வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்படும். தற்போது நடந்து முடிந்த வாக்காளர் சுருக்கமுறை திருத்தப் பணிகளின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக 28 லட்சம் பேர் மனு செய்துள்ளனர். அவர்களின் குறைந்தது 95 சதவீதம் பேராவது புதிய அட்டைகளை பெறுவர். அவர்கள் அனைவருக்கும், வாக்காளர் தினத்தன்று (ஜனவரி 25) வாக்காளர் அட்டைகள் (புதிய வண்ண அட்டைகள்) தரப்படும்.

இப்பணிகளுக்காக கோரப்பட்ட தொழில்நுட்ப டெண்டரில் 4 நிறுவனங்கள் மனு செய்துள்ளன. இதன்பிறகு, நிதி தொடர்பான டெண்டர் கோரப்பட்டு, ஒரு நிறுவனம் இறுதி செய்யப்படும். பின்னர், 10 நாள்களில் புதிய அட்டைகள் அச்சிடப்பட்டுவிடும். ஏற்கனவே, வாக்காளர் அட்டை பெற்றவர்களுக்கு புதிய அட்டை வழங்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x