Published : 12 Mar 2014 09:15 AM
Last Updated : 12 Mar 2014 09:15 AM
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பகுதியில் சில அடி ஆழத்துக்கு சாலை திடீரென பள்ளமாகி ரசாயன நுரை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ரயில் நிலையத்தில் இருந்து எல்.ஐ.சி. ரயில் நிலையம் நோக்கி தரையில் இருந்து 40 அடி ஆழத்தில் ராட்சத டனல் போரிங் மிஷின் மூலம் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், அண்ணா சாலை அண்ணா தியேட்டர் அருகே திங்கள் கிழமை இரவு சில அடி ஆழத்துக்கு சாலை திடீரென உள்வாங்கியது.
அது வழியாக ரசாயன நுரை வெளியேறியது. இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் பதறினர். சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மெட்ரோ ரயில் பணியாளர்கள் உடனே விரைந்து வந்தனர். அங்கு 20 அடி நீளம், 20 அடி அகலத்துக்கு தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்களும் சாலை இறங்கிய இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்ணா சாலை அண்ணா சிலை அருகே கடந்த மாதம் 20-ம் தேதி இதுபோல சாலை திடீரென இறங்கி பள்ளம் உருவானது. மண்ணடி, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் மீண்டும் சாலை இறங்கியது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகள் நடக்கும் இடங்களில் அவ்வப் போது சிறியதும், பெரியதுமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத் தான் செய்கின்றன. அண்ணா சாலை மட்டுமின்றி, சுரங்கப் பாதை அமைக்கும் இடங்கள் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சற்று கவனமாக, மெதுவாகச் செல்வது நல்லது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT