Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM
சாந்தோம் இந்தியன் வங்கியில் நடந்த திருட்டு முயற்சி, பாட்டியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்டது. முகமூடி அணிந்து வந்த திருடனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் வங்கியின் மாடியில் வீட்டு உரிமையாளர் சரஸ்வதி (70) வசித்து வருகிறார். வங்கி எதிரே அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. சனிக்கிழமை மாலை வங்கியை மூடிவிட்டு ஊழியர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வங்கிக்குள் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டது.
இதைக்கேட்டு உரிமையாளர் சரஸ்வதி விழித்துக்கொண்டார். நீண்ட நேரம் உடைக்கும் சத்தம் கேட்டதால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, தாம்பரத்தில் வசிக்கும் தனது மருமகன் ராமனுக்கு செல்போனில் விவரங்களை கூறினார். அவர், நங்கநல்லூரில் வசிக்கும் வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவிக்க, தியாகராஜன் உடனே காரில் வங்கிக்கு புறப்பட்டு வந்தார். வரும் வழியிலேயே காவல் கட்டுப்பாட்டு அறை 100–க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே தொடர்ந்து உடைக்கும் சத்தம் கேட்டதால் பயந்துபோன சரஸ்வதி, வீட்டின் வெளிப்புற விளக்குகளை எரியவிட்டார். அதோடு உதவிக்கு கூச்சல் போட்டார். அவரது சத்தம்கேட்டு அருகே இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிலரும் விளக்குகளை எரியவிட்டு, பால்கனி வழியாக எட்டிப் பார்த்தனர். விளக்குகள் எரிந்ததையும், பாட்டியின் குரலையும் கேட்ட திருடன் நிலைமையை உணர்ந்து, ஆட்கள் வருவதற்குள் தப்பி ஓடிவிட்டான்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கிடைத்த ஒரு நிமிடத்துக்குள் இரவு ரோந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். ஆனால், அதற்கு முன்பே திருடன் தப்பிவிட்டான். வங்கியின் கிரில் கேட்டின் பூட்டை ரம்பத்தால் அறுத்து உள்ளே புகுந்த திருடன், நகை, பணம் உள்ள லாக்கரை திறக்க முயன்றுள்ளான். அது முடியாமல் போனதால் தான் கொண்டுவந்த கடப்பாரையால் லாக்கரை உடைக்க முயற்சி செய்திருக்கிறான். அப்போது ஏற்பட்ட சத்தத்தில்தான் சரஸ்வதி விழித்திருக்கிறார்.
காவல் துறையினர்
வங்கிக்குள் சென்று சோதனை நடத்தியபோது, கிரில் கேட்டின் அருகில் திருடன் பயன்படுத்திய ரம்பம் கிடந்தது. வங்கியில் இருந்த ஒரே ஒரு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஒரு திருடன் மட்டும் முகமூடி அணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. மூதாட்டி சரஸ்வதியின் சாமர்த்தியத்தால் வங்கியில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.
தூங்கிய காவலாளி
திருட்டு முயற்சி நடந்தபோது வங்கியின் காவலாளி பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் (35), வங்கிக்கு வெளியேதான் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். காவல் துறையினர் வந்து அவரை எழுப்பிய பின்னரே நடந்த சம்பவங்கள் அவருக்கு
தெரிந்தது. "பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வந்தேன். இதனால் அயர்ந்து தூங்கிவிட்டேன்" என்று காவல் துறையினரிடம் ரமேஷ் கூறியிருக்கிறார். திருட்டு முயற்சியில் ரமேஷுக்கு தொடர்பிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT