Published : 22 Mar 2014 02:08 PM
Last Updated : 22 Mar 2014 02:08 PM

ஜிபிஎஸ் கருவி பொருத்த கால் டாக்ஸிகளுக்கு 2 மாத கெடு : மாதந்தோறும் அறிக்கை அளிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் கால் டாக்ஸிகளில் ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) கருவியை 2 மாதங்களில் பொருத்த வேண்டும். வாகன பராமரிப்பு, ஓட்டுநர் நடத்தை உள்ளிட்டவை கொண்ட அறிக்கையை மாதந் தோறும் அனுப்ப வேண்டும் என போக்குவரத்து துறை உத்தர விட்டுள்ளது.

தமிழகத்தில் நகரமயமாதல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் மக்களின் போக்குவரத்துத் தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பெரிய நகரங்களில் கால் டாக்ஸிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்தம் 25 நிறுவனங்கள் மூலம் 20 ஆயிரம் கால் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன.

நேரடியாகவும் போன் மூலமும் இன்டெர்நெட் மூலமும் வாகனங்களை அழைக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அலுப்பு, களைப்பு இல்லாமல் புறப்பட்ட இடத்தில் இருந்து சேரும் இடம் வரை காரிலேயே சென்று இறங்க முடிகிறது என்பதால் ஏராளமானோர் விரும்பி பயணம் செய்கின்றனர்.

இஷ்டத்துக்கு கட்டணம்

ஆனால், ஆட்டோக்களுக்கு உள்ளது போல, கால் டாக்ஸிகளுக்கு விதிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. இதனால் கட்டணம் அவர்கள் இஷ்டத்துக்கு நிர்ணயிக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களும் போதுமானதாக இல்லை என்கின்றனர் மக்கள்.

கார்களில் உள்ள வசதிக்கு ஏற்ப குறைந்தது 4 கி.மீ தூரத் துக்கு ரூ.100, ரூ.120, ரூ.150, ரூ.180 என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் தலா ரூ.18 முதல் ரூ.20 வரை வசூலிக்கப்படுகிறது. 5 நிமிடத்துக்கு காத்திருப்பு கட்டணம் ரூ.8 முதல் ரூ.10. எரிபொருள் விலை ஏற ஏற, கால் டாக்ஸி கட்டணமும் திடீர் திடீரென உயர்த்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் போக்குவரத்து துறைக்கு வந்துள்ளன.

இதையடுத்து, சென்னையில் போக்குவரத்து துறை சார்பில் கால் டாக்ஸி உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 25 கால் டாக்ஸி நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். கால் டாக்ஸி இயக்குபவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இதில் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: நடுத்தர மக்களின் முக்கிய வாகனமாக கால் டாக்ஸி மாறி வருகிறது. கால் டாக்ஸி இயக்கு பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங் கள் குறித்து கால் டாக்ஸி உரிமையாளர்களிடம் வலியுறுத் தப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும், பெயர் பேட்ச், அவசர புகார் எண், உரிமையாளர் பெயர், முகவரி ஆகியவை மட்டு மின்றி ஓட்டுநர் நடத்தை குறித்து தகவல் அளிக்க புகார் பெட்டியும் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

20 ஆயிரம் டாக்ஸிகள்

தமிழகத்தில் மொத்தம் 20 ஆயிரம் கால் டாக்ஸிகள் ஓடுகின் றன. இதில் 3 ஆயிரம் கால் டாக்ஸிகளில் மட்டுமே ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மீதமுள்ள 17 ஆயிரம் கால் டாக்ஸிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த 2 மாதம் கெடு அளிக்கப் பட்டுள்ளது.

கால் டாக்ஸிகளில் பயணம் செய்பவர்களின் விவரங்கள், ஓட்டுநரின் நடத்தை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கால் டாக்ஸி உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 20 ஆயிரம் கால் டாக்ஸிகள் ஓடுகின் றன. இதில் 3 ஆயிரம் கால் டாக்ஸிகளில் மட்டுமே ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x