Published : 19 Mar 2014 12:00 AM
Last Updated : 19 Mar 2014 12:00 AM
மாநகராட்சியின் முறையான பராமரிப்பு இல்லாததால் மயிலாப்பூர் பூங்காவை சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தும் இடமாக மாறியதால், பூங்காவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
மயிலாப்பூர் கச்சேரி சாலை
யில் பறக்கும் ரயில்வே பாலத்தின் கீழே மாநகராட்சி பூங்கா உள்ளது. திருமயிலை (மயிலாப்பூர்) ரயில் நிலையம் - கச்சேரி சாலையை இணைக்கும் வழியாக இந்த பூங்கா இருக்கிறது. ரயில் பயணிகள்
மட்டுமின்றி, அலுவலகம் செல்பவர்கள், பள்ளி - கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பூங்கா வழியையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மாநகராட்சியின் முறை
யான பராமரிப்பு இல்லாததால், சமூக விரோதிகள் பிடியில் பூங்கா சிக்கியுள்ளது.
இந்த பூங்காவை மாநகராட்சி கண்டுகொள்ளாததால், சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக பூங்கா மாறியுள்ளது. பூங்காவில் எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கிளாஸ், தண்ணீர் பாக்கெட், சிகரெட் பாக்கெட், பான் மசாலா பாக்கெட் குப்பைகள் குவிந்துள்ளன. இவை ஒருபுறம் இருந்தாலும், பூங்காவில் மறைமுகமாக கஞ்சாவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கஞ்சாவை வாங்குபவர்கள், பூங்காவில் அமர்ந்து கொண்டு சிகரெட் பிடிப்பதைப் போல சர்வ சாதாரணமாக கஞ்சா அடிக்கின்றனர். போதையில் இருப்பவர்கள் அந்த வழியாகச் செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்கின்றனர். பாதுகாப்பு இல்லாததால் பூங்கா வழியைப் பயன்படுத்த பெண்கள் அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கும், மயிலாப்பூர் போலீஸாருக்கும் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து புகார் வரும்போது மட்டும், போலீஸார் வந்து பூங்காவில் அமர்ந்திருக்கும் சமூக விரோதிகளை அடித்து விரட்டுகின்றனர். அதன்பின், தொடர்ந்து கண்காணிப்பதில்லை. அதனால், சமூக விரோதிகள் மீண்டும் பூங்காவை ஆக்கிரமிக்கின்றனர்.
நோய் பரவும் இடம்
இந்த பூங்கா அருகிலேயே பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது. கால்வாயில் தூர்வாரப்படும் கழிவு பூங்காவிலேயே கொட்டப்படுகிறது. குப்பைகளும் அங்கு குவிந்துள்ளன. மேலும், பூங்காவிலேயே பலர் சிறுநீர், மலம் கழிக்கின்றனர். பூங்காவில் உள்ள மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தின் கழிவுகளும் பூங்காவிலேயே விடப்படுகின்றன. இதனால் நோய் பரவும் இடமாக பூங்கா மாறியுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
இதுகுறித்து மயிலாப்பூர் மக்கள் கூறுகையில், “பூங்காவில் பகல், இரவு என எப்போது பார்த்தாலும் 3, 4 பேர் மது குடித்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த பக்கம் செல்லவே பயமாக உள்ளது. பெண்கள் தனியாக பூங்காவில் நடந்துசெல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மாநகராட்சிக்கு பலமுறை புகார் கொடுத்து விட்டோம். ஆனால், இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. குழந்தைகள் விளையாடுவதற்கும், முதியவர்கள் நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட பயிற்சிகளை செய்வதற்கும் ஏற்றாற் போல் பூங்காவை மாநகராட்சி முறையாக பராமரிக்க வேண்டும். பாதுகாப்புக்கு போலீஸாரை நிறுத்த வேண்டும்” என்றனர்.
சென்னை மாநகராட்சி 9-வது மண்டல அதிகாரி அண்ணாதுரை கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், அதற்கான பணிகளில் அனைவரும் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் முடிந்த பிறகு, மயிலாப்பூர் மாநகராட்சி பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT