Published : 11 Feb 2014 12:20 PM
Last Updated : 11 Feb 2014 12:20 PM

கோவை: வன விலங்குகளின் குடிநீர் தேவையை சமாளிக்க சூரிய சக்தி மோட்டார்

கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்முறையாக கோவையில் மாவட்டத்தில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனப் பகுதியில் சூரியசக்தி மோட்டார்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மனித வனவிலங்கு மோதல் தடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார் பேசுகையில்,

மனித வன விலங்கு மோதல் கோவையில் அதிகரித்து வருகிறது. இதனால் உயிர்ச்சேதமும், பயிர்ச்சேதமும் தொடர்ந்து கொண்டே உள்ளன.

பாதிக்கப்படும் கிராமங்களின் பட்டியலை தயார் செய்து அதன் அடிப்படையில், கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. விளை நிலங்களில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகம் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மூன்று வருடம் முன்பாக இருந்தே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். ஆனால் அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

காட்டுப்பன்றிகளின் தொல்லையைக் குறைக்க உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளையே தீர்மானமாக அறிவித்து அரசுக்கு அனுப்பலாம். பயிர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் இழப்பீடும், விலைவாசியும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே பயிர் இழப்பீட்டை குறிப்பிட்ட தொகையாக நிர்ணயம் செய்யாமல், அப்போதைய சந்தை மதிப்புக்கேற்ப இழப்பீடு கொடுக்கலாம். இதை இந்தக் கூட்டத்தின் தீர்மானமாக வைத்து அரசுக்கு அனுப்பலாம் என்றார்.

விலங்கு ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகள்

வன விலங்கு ஊடுருவல் குறித்து அவர் கூறுகையில், மனித - விலங்கு மோதல் ஒரே நாளில் தீரக்கூடிய பிரச்சினை இல்லை. கடந்த ஆண்டு வரை அகழிகளில் உள்ள பாறைகளை உடைக்க அனுமதி கிடையாது. தற்போது தான் இந்த அனுமதி கிடைத்துள்ளது. ஆனாலும் அதில் 100 சதவீதம் முழு அனுமதி இல்லை. இதன் ஆயுட்காலம் ஆறுமாதமே என்றாலும் ஓரளவிற்கு யானைகளை கட்டுப்படுத்தலாம்.

கோவை தாளியூர் பேரூராட்சியில் யானைகள் வருவதை அறிய, சைரன் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வால்பாறையில் அமைக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு அமைப்பினைப் போல, கோவையில் பரிட்சார்த்த முறையில் இந்த இயர்லி வார்னிங் சிஸ்டம் செயல்படுத்தப்படும். வன விலங்கு ஊடுருவலை தடுக்க இந்த அமைப்பு உதவாது என்றாலும், பொதுமக்களை காப்பாற்றும் முயற்சியாகவே இது நடைமுறைப் படுத்தப்படும்.

சூரிய சக்தி மோட்டார்கள்

வன விலங்குகள் வெளியே வருவதைத் தடுக்க, கடந்த மூன்று வருடங்களாக வனப் பகுதிகளில் 75 ஹெக்டரில் தீவனப் பயிர் தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில் சூரிய சக்தி மோட்டார்களை வனப் பகுதியில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேம்புக்கரை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதியில் இந்த யூனிட்டுகள் அமைக்கப்படும். வனத்தில் மின்சாரத் தேவையை சமாளித்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த நடைமுறை தேவைப்படும். இது வெற்றியடையும் பட்சத்தில் அனைத்துப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். கிராமப் பகுதிகளிலும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் அடிப்படையில் தெரு விளக்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகிய குறுகிய கால பணிகளும், அகழி பாறைகளை உடைப்பது, சோலார் மோட்டார், உன்னிச்செடிகளை அகற்றுவது போன்ற நீண்ட கால பணிகளும் நடத்தப்படும். இதன் மூலம் விலங்குகளின் ஊடுருவல் பெருமளவு குறையும் வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x