Published : 15 Oct 2013 03:33 PM
Last Updated : 15 Oct 2013 03:33 PM
மூன்றடுக்கு விவசாயக் கூட்டுறவு கடன்முறையின் அடித்தளத்தைத் தகர்க்கும் நபார்டு வங்கியின் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நபார்டு வங்கி மூன்றடுக்குக் கூட்டுறவுக் கடன் முறையின் அடித்தளத்தைத் தகர்க்கும் வகையில் கிராமக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை வங்கியியல் பணியில் ஈடுபடக் கூடாது எனத் தடுத்து, அவற்றை மத்திய வங்கியின் முகவர்களாக மட்டுமே செயல்பட வேண்டும் என்று முடக்கி, அவற்றின் சொத்துகளையும், பொறுப்புகளையும் மத்திய வங்கிக்கு மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றது.
இதற்காக துணை விதிகளைத் திருத்தவும் வலியுறுத்தி வருகிறது. நுனிக் கொம்பிலிருந்து அடிக்கிளையை வெட்டும் இந்த முயற்சிக்கு உடன்பட முடியாது என்று கேரள அரசு நிராகரித்து விட்டது; கேரள உயர் நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.
மேலும், கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான கிராமக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை விவசாயிகளிடமிருந்து அழிக்கும் இந்த முயற்சி மாநில சுயாட்சிக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானதாகும்.
1904-இல் தொடங்கி சுதந்திரமாக ஜனநாயக முறையில் இன்றுவரை இயங்கி வரும் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மைக் கடன் சங்கங்கள் என்னும் கூட்டுறவு அமைப்பின் ஆணிவேரையும் அறுத்தெரியும் முயற்சியில் நபார்டு வங்கி ஈடுபட்டுள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாகத் தலையிட்டு நபார்டு வங்கியின் இந்தத் தன்முனைப்பான - இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணான - ஒட்டுமொத்தக் கூட்டுறவு அமைப்புகளின் அடித்தளமான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளை அழிக்கும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நபார்டு வங்கி தனது நோக்கத்திற்கும், அதிகார வரம்புக்கும் அத்துமீறலாக மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு எதிராக இந்திய மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் கூட்டமைப்பும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும், கூட்டுறவாளர்களும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும், போராட்டத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், கூட்டுறவுக் கடன் வங்கிகளைக் காப்பாற்றவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் மக்களைத் திரட்டிப் போராட நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.
உண்மைக்குப் புறம்பான ஒன்றுக்கொன்று முரண்பாடான புள்ளி விவரங்களைக் காட்டி நபார்டு வங்கி மேற்கொள்ளும் இந்த முயற்சி, 'நல்லது செய்தல் ஆற்றிராயினும்; அல்லது செய்தல் ஓம்புமின்' என்ற அறவுரையைத்தான் நினைவுபடுத்துகின்றது.
உள்ளதைச் சிதைக்கும் இந்த உருப்படாத முயற்சியை உடன் கைவிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிடில், இவ்வளவு காலமாகக் கட்டிவளர்த்த கூட்டுறவு விவசாயக் கடன் அமைப்புகள் அழிக்கப்படுவதற்கு இந்த ஆட்சியும் உடந்தையாக இருந்தது என்று வருங்காலம் பழிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT