Published : 16 Oct 2013 04:38 PM
Last Updated : 16 Oct 2013 04:38 PM

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம்: ஜெயலலிதா

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த சபதமேற்போம் என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால், தொடங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுக தனது 42-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.

திமுக ஆட்சியின் போது பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களும், கொள்கைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன. பேரறிஞர் அண்ணாவையே மக்கள் நினைவில் இருந்து அகற்றும் அநியாய முயற்சியில் ஈடுபட்டு சுய விளம்பர சூறாவளியாக மாறி, மக்கள் வரிப் பணத்தை தனது குடும்ப கருவூலத்திற்கு இடமாற்றம் செய்தார் கருணாநிதி. இதனால் பொதுமக்கள் மனம் வெதும்பினர்.

பொதுமக்களின் உள்ளக் குமுறலை துணிச்சலுடன் வெளிப்படுத்தினார் என்கிற ஒரே காரணத்திற்காக, கழகப் பொருளாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் எம்.ஜி.ஆரை கட்சியை விட்டே நீக்கினார் கருணாநிதி. அவரை எதிர்த்து தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம் தான் அதிமுக.

அரசியல் வரலாற்றில் ஆறே மாதங்களில் ஒரு இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி வாகை சூடி, அதிசயத்தை ஏற்படுத்திய முதல் இயக்கம் அதிமுக தான்.

1976-ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் சிறைக் கொடுமை அனுபவித்த, கண்களை, கால்களை இழந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டால் எண்ணிலடங்காது. கழகத்திற்காக பாடுபட்ட இவர்களை எல்லாம் இந்த நாளில் நினைவுகூர்வது கடமையாகும்.

திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் மத்திய அரசு அமைத்த சர்க்காரியா கமிஷன் தெளிவாக தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றியைப் பெற்றது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நான் முதலமைச்சராக பதவியேற்றேன். தற்போது மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறேன். விலையில்லா அரிசி, கட்டணமில்லாக் கல்வி, அன்னதானத் திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகங்கள், அம்மா திட்டம், அம்மா குடிநீர் போன்ற ஏழை, எளிய மக்கள் பயனடையும் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் செயல்படுத்தி வருகிறேன்.

இலங்கைப் பிரச்சினைக்காக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் திமுக விலகிவிட்டதாக அறிவித்த கருணாநிதி, காங்கிரஸ் தயவினால் தன் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்ததும், காங்கிரசுடன் ஒட்டி உறவாடத் தொடங்கிவிட்டார்.

அன்றைக்கு சர்க்காரியா கமிஷன் தொடர்பான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க காங்கிரசிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி, இன்று 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் கட்சியிடம் அடிபணிந்து விட்டார்.

திமுக-விற்கு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நிரந்தர முடிவு கட்ட அதிமுகவினர் சபதமேற்போம். அந்த சபதத்தினை நிறைவேற்றும் வகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் வகையில், தொண்டர்கள் களப் பணியாற்றிட வேண்டும் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x