Last Updated : 21 Mar, 2017 12:02 PM

 

Published : 21 Mar 2017 12:02 PM
Last Updated : 21 Mar 2017 12:02 PM

கடல் அரிப்பை தடுக்கும் பணிகள் பாதியில் நிறுத்தம்: படகுகளை நிறுத்த கரை இல்லாமல் அவதி - கடலூர் பெரியகுப்பம் மீனவர்கள் தவிப்பு

கூவத்தூர் அடுத்த கடலூர் பெரியகுப்பத்தில் கடல் அரிப்பை தடுக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், கடல் அரிப்பு அதிகரித்து படகுகளை நிறுத்த கரையில்லாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடலூர் சின்ன குப்பம், பெரிய குப்பம் மற்றும் ஆலிகுப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்காக, கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து மத்திய அரசின் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) பணிகளை மேற்கொண்டது.

இதில், ஜியோ டியுப் லைன் எனப்படும் இயந்திரம் மூலம், கடலில் உள்ள மணலை எடுத்து கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் கொட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், அப்பகுதியின் கடலில் மணலுடன் களிமண் கலந்திருப்பதால், அதை பயன்படுத்தி கரை ஏற்படுத்துவது தொழில்நுட்ப ரீதியில் கடினம் என மத்திய அரசு நிறுவனம் தெரிவித்தது.

இதையடுத்து, கடலூர் சின்ன குப்பத்தை ஒட்டி உள்ள பாலாற்று முகத்துவார பகுதியில் மணல் எடுக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. இதில், கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் 4 மீட்டர் ஆழம் மற்றும் அகலத்துடன் 2 கிமீ நீளத்துக்கு மணலை கொட்டும் பணிகள் நடந்தன. இதில்,கடலூர் சின்னகுப்பத்தில் 80 மீட்டர் நீளத்துக்கு மணல் கொட்டப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர்,கடலூர் பெரிய குப்பத்தில் பணிகள் தொடங்கின. ஆனால், மணல் எடுக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற் பட்டது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் மீதமுள்ள 1,920 மீட்டர் பகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனால், கடலூர் பெரிய குப்பத்தில் கடல் அரிப்பு அதிகரித்து மீனவர்களின் குடியிருப்புகள், வலை உலர்த்தும் கட்டிடங்கள் சேதமடைந்தன. கடற்கரையும் அழிந்ததால் படகுகளை நிறுத்த இடமில்லாமல் மீனவர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். சின்ன குப்பத்தில் பணிகளை முடித்து, பெரிய குப்பத்தில் தொடங்கவிருந்த நிலையில் பாலாற்று முகத்துவாரத்தில் மண் எடுக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அதிமுகவின் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மீனவர் அணி பொருளாளர் நாராயணன் கூறும்போது, பெரிய குப்பத்தில் பணிகள் தொடங்கப்பட்டபோது, அரசியல் பிரமுகர்கள் சிலர் அதிகாரிகளிடம் கமிஷன் கேட்டுள் ளனர். மறுத்ததால், சின்ன குப்பம் மீனவர்களை தூண்டிவிட்டு மண் எடுப்பதை நிறுத்தினர். இதனி டையே மண் எடுப்பதற்கான கட் டணத்தை மத்திய அரசு நிறுவனம் பொதுப்பணித்துறைக்கு செலுத்தி அனுமதியும் பெற்றுள்ளது. இருப்பி னும் அந்த பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றார்.

இதுகுறித்து, கடலூர் பெரிய குப்பம் ஊர் தலைவர் தாமோதரன் கூறியதாவது: கடல் அரிப்பு அதிகரித்து கடற்கரை முற்றிலும் அழிந்துவிட்டது. படகுகளை நிறுத்த இடமில்லாம் டிராக்டர் உதவியுடன் சாலையில் நிறுத்தி வருகிறோம். இதேநிலை தொடர்ந்தால், விரைவில் சாலையும் அடித்து செல்லும் நிலை உள்ளது,என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜூலியட் எட்வர்ட்டிடம் கேட்டபோது, 2 குப்பத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கராணமாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது சமாதானம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x