Published : 01 Nov 2013 01:04 AM Last Updated : 01 Nov 2013 01:04 AM
ஆம்னி பஸ் மீதான புகாருக்கு ஹெல்ப் லைன் அமைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் குறித்து மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிப்பதற்காக ஹல்ப் லைன் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் சில ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதைத் தடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர்.கோபிகா பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சத்தியச்சந்திரன், "தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் மிக அதிகமான கட்டணத்தின் காரணமாக பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு வசூலிப்பதைத் தடுத்திடும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ். மூர்த்தி, "அதிகமான கட்டணம் வசூலிப்பதைத் தடுத்திடும் வகையில் ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கூட்டத்தை போக்குவரத்துத் துறை நடத்தியது. கூடுதல் கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்றும், கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் மக்களுக்கு திருப்பித் தரப்படும் என்றும் பஸ் உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதையும் மீறி அதிகமான கட்டணம் வசூல் செய்வதாக மக்களிடமிருந்து புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும்" என்றார்.
இதனையடுத்து மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிப்பதற்காக ஹல்ப் லைன் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் மாநில போக்குவரத்து துறை ஆணையரையும், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கங்களையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
WRITE A COMMENT