Published : 21 Mar 2014 06:23 PM
Last Updated : 21 Mar 2014 06:23 PM

நதிநீர் இணைப்பை செயல்படுத்த அதிமுக உறுதி: ஜெயலலிதா

நதிநீர் இணைப்பு என்பதை செயல்படுத்துவதில் அதிமுக உறுதியாக உள்ளதாக, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"தி.மு.க-வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் "நதிகள் தேசிய மயமும் இணைப்பும்" என்ற தலைப்பின் கீழ் இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் தேசியமயம் ஆக்கி, இந்தியாவின் வடபாகத்தில் உள்ள கங்கை நதியை, தென் பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணா, பெண்ணாறு, காவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறு ஆகிய நதிகளுடன் இணைத்திட வேண்டும் என்றும், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் வீணாகும் அச்சன்கோவில் - பம்பா நதிகளை தமிழ்நாட்டுடன் இணைத்திட வேண்டும் என்றும் தெரிவித்து இதனை நிறைவேற்ற தி.மு.-கழகம் பாடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நதிநீர் இணைப்பு என்பது பாரதி கண்ட கனவு. இதனை செயல்படுத்துவதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. 1996 முதல் கடந்த 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்து வரும் தி.மு.க. தனது அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது 2014-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை நிறைவேற்ற ஒரு துரும்பையாவது கருணாநிதி கிள்ளிப் போட்டாரா என்றால் இல்லை; நிச்சயமாக இல்லை. இந்த நதிநீர் இணைப்பில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்கு உடன்பாடில்லை.

தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி இந்தத் திட்டத்திற்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்து 2009-ஆம் ஆண்டு கருத்து தெரிவித்த ராகுல் காந்தி நதிகள் இணைப்பு என்பது ஆபத்தானது என்றும், கடினமான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது ஒரு நாசகரமான எண்ணம் என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்திற்கு தி.மு.க. ஏதேனும் எதிர்ப்பு தெரிவித்ததா?

இந்தக் கருத்தினை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை தி.மு.க. வற்புறுத்தியதா? இந்தக் கருத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று தி.மு.க. கூறியதா? மத்திய அரசை கண்டித்து ஒரு அறிக்கையாவது தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டதா? குறைந்தபட்சம் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கடிதமாவது எழுதப்பட்டதா? இவற்றில் எதையுமே தி.மு.க. செய்யவில்லையே.

17 ஆண்டுகளாக எதையுமே செய்யாத தி.மு.க., நதிநீர் இணைப்புக்கு எதிரான கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிக்கக் கூட திராணியில்லாத தி.மு.க. நதிகள் தேசியமயம் மற்றும் இணைப்பிற்கு பாடுபடும் என்று கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை. கருணாநிதியின் நினைப்பெல்லாம் குடும்ப இணைப்பில் தானே தவிர, நதிநீர் இணைப்பில் அல்ல என்பதை உலகமே அறியும்.

உங்களுடைய வாக்குகளை பெறுவதற்காக வாக்குறுதிகளை அளிக்கிறார் கருணாநிதி. உங்களை ஏமாற்ற நினைக்கும் தி.மு.க-விற்கு வருகின்ற தேர்தலில் நீங்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க-விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும்" என்றார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x