Published : 06 Apr 2015 11:12 AM
Last Updated : 06 Apr 2015 11:12 AM

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு ஜெ.-க்கு சாதகமாக இருக்காது: விஜயகாந்த்

கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என ஜெயலலிதா நம்பிக்கை வைக்க வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மகளிரணி செயலாளர் டாக்டர் சிவகாமி முத்துக்குமார் வரவேற்றார்.

சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என ஜெயலலிதா நம்பிக்கை வைக்க வேண்டாம். வாக்காளர்கள் மத்தியில் தேமுதிக தனது செல்வாக்கை இழந்துவிட்டதாக கூறுகிறார்கள். அதில் உண்மையில்லை. தேமுதிகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மாநிலத்தில் வலுவான கட்சியாகவே உள்ளது. சட்டப்பேரவையில் எனக்கு இறங்கு முகம் என கூறுகின்றனர். ஆனால், எனக்கு இப்போதுதான் ஏறுமுகம்.

மேகேதாட்டு அணை பிரச்சினையில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை தமிழக விவசாயிகள் எரிக்கின்றனர். இப்பிரச்சினை சம்பந்தமாக நாடாளுமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள், டெல்லியில் உள்ள சோனியா காந்தி வீடு முன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஏனெனில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு உள்ளது. எனவே சோனியா காந்தி இப்பிரச்சினையை பார்த்துக் கொள்வார்.

தமிழகத்தில் எதுவுமே சரியான பாதையில் செல்லவில்லை. மாறாக நேர்மையான அதிகாரிகள் கொலை மிரட்டலுக்கு ஆளாகின்றனர்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

தொடர்ந்து பேசிய தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த், "தமிழகத்தில் ஏரளாமனா பிரச்சினைகள் உள்ளன. ஆனால் ஆளும் அதிமுக அரசு பாராமுகமாக இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முடிவுகாலம் நெருங்கிவிட்டது" என்றார்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ், பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x