Last Updated : 22 Jan, 2017 04:02 PM

 

Published : 22 Jan 2017 04:02 PM
Last Updated : 22 Jan 2017 04:02 PM

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றும் வரை போராட்டம் தொடரும்: விருதுநகரில் சூளுரைத்த மாணவர்கள்

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றப்படும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விருதுநகர் மாணவர்களும், இளைஞர்களும் உறுதியேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் இதுவரை இல்லாத அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது.

இதையடுத்து மாநில அரசின் வற்புறுத்தலின்பேரில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை இயற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், தற்காலிகமாக கொண்டுவரப்படும் இச் சட்டத்தை ஏற்று போராட்டத்தை கைவிடப் போவதில்லை. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவரும் வரை இப்போராட்டத்தை தொடரப் போவதாக மாணவர்களும், இளைஞர்களும் உறுதியேற்றுள்ளனர்.

இது குறித்து விருதுநகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர் ஹரிபாலன் (19) கூறுகையில், ஜல்லிக்கட்டு நடத்த தற்போது இயற்றப்படும் சட்டம் 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

மாணவி ஜெயபிரீத்தி (20) கூறுகையில், ஜல்லிக்கட்டு என்றால் முன்பு எங்களுக்குத் தெரியாது. இப்போது அதன் பாரம்பரியம், அவசியம் குறித்து தெரிந்துள்ளதால் போராட்டத்தில் மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் பங்கேற்றுள்ளோம். ஜல்லிக்கட்டு மட்டுமின்றி தமிழ் மொழி, தமிழ் மரபுகள், அழிந்துவரும் தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கவும் இதுபோல் மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து போராடுவோம் என்றார்.

மாணவி மஞ்சுளா (20) கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மட்டுமின்றி, அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடைகளை தடை செய்யக் கோரியும், ஜாதியப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் எங்களது ஒற்றுமையும், போராட்டமும் இருக்கும் என்றார்.

மாணவர் பரணிகுமார் (23) கூறுகையில், ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். அதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

மாணவி சந்தியா (20) கூறுகையில், ஜல்லிக்கட்டை மட்டுமின்றி, அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய கலைகள், சுரண்டப்படும் இயற்கை வளங்கள், விவசாயம், விவசாயிகளின் நலன் ஆகியவற்றை காக்க அரசு உரிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். இதை வலியுறுத்தி எங்களது அடுத்தகட்ட போராட்ட நகர்வு இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x