Published : 28 Jan 2014 08:24 AM
Last Updated : 28 Jan 2014 08:24 AM
தேர்தலில் தி.மு.க. தோற்கும் என்று சொல்லவில்லை; தோற்றுவிடக் கூடாது என்றுதான் சொல்ல வந்தேன். பத்திரிகைகள்தான் கொஞ்சம் மாற்றிப் போட்டுவிட்டன என்று மு.க.அழகிரி தெரிவித்தார்.
தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். புன்னகையுடன் காட்சியளித்த அவர், பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உங்களை இவ்வளவு தொண்டர்கள் சந்திக்க வந்துள்ளார்களே அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?.
நேற்று விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள் என்னை வரவேற்று நான் நீக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்கள். அதேபோல் இன்றும் ஆதரவாளர் முத்துப்பாண்டி தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள், தொண்டர்கள் என்னை வந்து சந்தித்துள்ளனர். அவர்களுக்கும் விமான நிலையத்திற்கு வருகை தந்த என் ஆதரவாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘பிறந்த நாளைக்கு இதைவிட அதிகமானோர் வருவோம்’என்று என்னிடம் மகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார்கள்.
‘போட்டி வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும்கூட தி.மு.க. தானாகவே தோற்றுவிடும்’ என்று சென்னையில் சொன்னீர்களே... இன்று கூடியுள்ள கூட்டத்தை அதற்குப் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் உள்ளதா?.
தி.மு.க. தோற்கும் என்று நான் சொன்னது, தி.மு.க. தோற்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நான் கழகத் தலைவர் கலைஞரிடம், இப்படி பலர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரை மாநகர் கழகம் கலைக்கப் பட்டிருக்கிறது. திருப்பியும் மாநகர் கழகத்தைக் கொண்டு வாருங்கள். அதேபோல மதுரை மாநகரத்திலும், புறநகரிலும் கிட்டத்திட்ட 10 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதுமட்டுமல்ல, மதுரை மாநகரத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் பதவியில் இருந்தார்கள். வீட்டுக்கு 5 ஓட்டு என்று வைத்துக்கொண்டால்கூட, 5,000 ஓட்டு நமக்கு இழப்பு ஏற்படும். எனவே, இப்படியே நீக்கிக்கொண்டே போனால், இந்தப் படலம் தொடர்ந்து கொண்டே போனால் தி.மு.க. தோற்கும் என்றுதான் சொன்னேன்.
நான் என்ன எண்ணத்தில் சொன்னேன் என்றால், வீட்டிலே ஒரு பிள்ளையை ‘நீ உருப்பட மாட்ட’என்று தாயோ, தந்தையோ சொல்வது, அந்தப் பிள்ளை உருப்படாமல் போகட்டும் என்பதற்காக அல்ல, நல்லா வரணும் என்பதற்காகத்தான். அதேபோல கட்சி நல்லா வரணும், ஜெயிக்கணும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்.
ஆசிரியர்கள், ‘நீ உருப்பட மாட்டடா’ என்று கிளாஸ்ல சொல்வாங்க இல்ல. அது மாதிரி நல்ல எண்ணத்தில் சொன்னதுதான் அது. நான் அப்படித்தான் சொன்னேன். ஆனா, நீங்க (பத்திரிகைகள்) அதை கொஞ்சம் மாற்றிப் போட்டுட்டீங்க.
(இவ்வாறு அவர் கூறியதும், பின்னால் நின்ற ஆதரவாளர்கள் இனிமேலாவது ஒழுங்கா போடுங்க என்று பத்திரிகையாளர்களுக்கு அறிவுரை சொன்னார்கள்).
நீங்க துரைமுருகனைப் பார்த்ததாகவும், விளக்கம் தெரிவித்ததாகவும் சொல்லப் படுகிறதே?.
துணை பொதுச்செயலாளர் என்ற முறையிலே அவரிடம் என்னுடைய குறைகளைச் சொன்னேன். அதாவது, ‘இப்படி என்னையை நீக்கியிருக்கிறீர்களே? இது அநியாயம் இல்லையா?’ என்று சொன்னேன். ‘நாலு பேர் முன்னாடி பேசியிருந்தால் என்னை நீக்கியிருக்கலாம். நானும், கழகத் தலைவர் கலைஞர் அவர்களும் மட்டும்தான் பேசினோம். அதற்கு நடவடிக்கையா?’ என்று கேட்டேன். அவர் விசாரிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அன்றைய தினம் உங்கள் தந்தையிடம் காரசாரமாகப் பேசி அடிக்கப் போனதாக மீடியாக்களில் தகவல் வெளியாகி இருக்கிறதே?
எந்த மீடியாவில் போட்டிருக்காங்க?. அப்படி எல்லாம் நடக்கவே இல்லை. அப்பாவைப் போய் யாராவது... உங்க அப்பாவை நீங்க அப்படித்தான் செய்வீங்களா?, சும்மா முறையிட்டேன். வேறொன்றும் நடக்கவில்லை.
கட்சியினர் மீது பி.சி.ஆர். வழக்குப் போட நீங்கள்தான் காரணம் என்கிற குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பொதுச்செயலாளர் (க.அன்பழகன்) அறிக்கையில் அப்படிச் சொல்லியிருக்கிறார். அதை விசாரணை பண்ணணும் இல்ல?. விசாரிக்காமல் நடவடிக்கை எடுத்ததைத்தான் தவறு என்று சொல்கிறேன். அச்சம்பவம் நடந்தபோது, 4 நாளா நான் ஊரிலேயே இல்லியே? என்மேல நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களையே நீக்கிடுவாங்க போல இருக்கு. அதான் எனக்குப் பயமா இருக்கு.
இப்போது உங்களோடு தலைமை சார்பில் யாராவது சமரச பேச்சுவார்த்தைக்கு வருகிறார்களா?
இதுவரைக்கும் யாரும் வரவில்லை. நானும் பேசவில்லை. என்னை சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. பிறந்த நாள் முடியட்டும். அதுக்கப்புறம் என்னுடைய ஆதரவாளர்களை எல்லாம் கேட்டு முடிவெடுக்கிறேன்.
உங்கள் ஆதரவாளர்களைச் சந்திக்க தமிழகம் முழுவதும் செல்லும் திட்டம் எதுவும் உள்ளதா?
தமிழ்நாடு முழுக்க உள்ள ஆதரவாளர்கள் எல்லாம் என்னைப் பார்க்க இங்கேயே வந்துக்கிட்டு இருக்காங்க. பிறந்த நாள் அன்னைக்குப் பார்க்கத்தான் போறீங்க. அதுக்கப்புறம் அதைப் பற்றிப் பேசுவோம்.
இவ்வாறு கூறிவிட்டு வீட்டிற்குள் செல்ல முயன்ற அழகிரியிடம் “விஜயகாந்த் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்தில் மாற்றம் உள்ளதா?” என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்பதற்குள் வீட்டிற்குள் சென்றுவிட்டார். “பிறந்த நாளன்று வாங்க. பேட்டி இருக்கு” என்று அழகிரி சார்பில் ஆதரவாளர்கள் பதில் சொன்னார்கள்.
பின்னர், நிருபர்கள் அருகே வந்த முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், “நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அண்ணன் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செல்கிறார். அங்குள்ள தொண்டர்களின் அழைப்பை ஏற்று அங்கே போகிறார். வந்துவிடுங்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT