Last Updated : 18 Feb, 2014 08:06 PM

 

Published : 18 Feb 2014 08:06 PM
Last Updated : 18 Feb 2014 08:06 PM

விருதுநகர்: பிளாஸ்டிக் இல்லா பசுமைப் பள்ளிக்கு ரூ. 5 லட்சம் பரிசு

பிளாஸ்டிக் பயன்பாடில்லா பசுமைப் பள்ளிக்கு ரூ. 5 லட்சம் முதல் பரிசும், 2-ம் பரிசாக ரூ. 3 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கை யையும், தைரியத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு மன்றங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

மேலும் மாணவர்களிடையே சுத்தம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளி வளாகத்தை பசுமை மாறாமல் பாதுகாக்கவும் தேசிய பசுமைப்படை தொடங்கப்பட்டு பசுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடில்லாத பள்ளி அல்லது பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்தல், பள்ளி வளாகத்தில் பசுமையை பராமரிக்கும் பள்ளிகளை மாநில அளவில் தேர்வுசெய்து அப்பள்ளிக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சமும், 2-ம் பரிசாக ரூ. 3 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 2 லட்சமும் வழங்க சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மல்லேசப்பா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பசுமைப் பள்ளி போட்டியில் பங்கேற்கும் பள்ளி பிளாஸ்டிக் பயன்பாடில்லாத சுத்தமான மற்றும் பசுமையான பள்ளியாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடை பயணங்கள், பேரணிகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதோடு, பள்ளி வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரித்து வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடில்லாமல் பசுமையை பராமரித்துவரும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ. ஜெயக்குமார் கூறியபோது, பிளாஸ்டிக் பயன்பாடில்லா பசுமைப் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து, அதுகுறித்து அறிக்கை சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தது 5 பள்ளிகளாவது இப்போட்டியில் பங்கேற்கும்.

இப்போட்டியில் பங்கேற்பதற் கான விண்ணப்பம் மற்றும் பள்ளியைப் பற்றிய விவரங் கள் குறித்த அறிக்கை சுற்றுச்சூழல் துறைக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்பதால், அதற்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே விண்ணப்பங்களை பள்ளி நிர்வாகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டிகள் தொடர்பான விவரங்களுக்கு விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி நிர்வாகத்தினர் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆர். குருசாமியை 96002 11884 என்ற கைபேசி எண்ணிலும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளி நிர்வாகத்தினர் ஒருங்கிணைப் பாளர் மாயாண்டியை 96005 62165 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x