Published : 13 Apr 2017 07:53 AM
Last Updated : 13 Apr 2017 07:53 AM

கன்னத்தில் அடி வாங்கியது ஈஸ்வரி மட்டும்தானா?

பிட்டுக்கு மண் சுமந்த கதை தெரியுமா? பாண்டிய நாட்டில் ஒருமுறை பெரு மழை பெய்தது. கரை புரண்டோடியது வைகை. கரைகள் பலம் இழந்தன. கரைகளைப் பலப்படுத்த மன்னன் உத்தரவிட்டான். அப்போது, பிட்டு விற்கும் மூதாட்டியான வந்தி என்பவர் முதுமை காரணமாக தன்னால் மண் சுமக்க முடியாது என்று கவலையுடன் ஈசனிடம் வேண்டினார். கூலியாள் வேடத்தில் வந்தார் ஈசன். ’கூலி என்ன கொடுப்பாய்?’ என்றார். பிட்டு கொடுத்தார் மூதாட்டி. உண்ட மயக்கத்தில் தூங்கிவிட்டார் ஈசன். வேலை செய்யாமல் தூங்குவதைக் கண்ட மன்னனின் பணியாள் கூலியாளின் முதுகில் பிரம்பால் விளாசினார். உலகம் முழுவதும் உள்ள உயிரினங்கள் மீது விழுந்த அடி அது. அத்தனை உயிர்களும் வலியை உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான்.

மேற்கண்ட சம்பவம் புராணக் கதையாக இருக்கலாம். ஆனால், அன்று ஈசனின் மீது விழுந்த அடி, இன்று ஈஸ்வரி மீது விழுந்துள்ளது. அன்று ஈசனின் மீது விழுந்த அடியால் மன்னன் தனது தவறை உணர்ந்தான். இன்றைய ஆட்சியாளர்களோ தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்கிறார்கள். இன்று ஈஸ்வரி மீது விழுந்த அடி அவர் வாங்கிய அடி மட்டும் அல்ல; மக்கள் ஒவ்வொருவர் மீதும் விழுந்த அடி. ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி. இந்திய இறையாண்மை மீது விழுந்த அடி. மக்களுக்கு போராடும் உரிமைகளை வழங்கிய இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மீது விழுந்த அடி!

இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் சட்ட விதி 12 தொடங்கி 35 வரை குடிமக்களுக்கு ஆறு வகையான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அதில் ஒன்று, சமூக நீதி கோரும் உரிமை அல்லது சுரண்டலை எதிர்க்கும் உரிமை. சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது மது. அதன் அடிப் படையில் தமிழக மக்கள் மதுக்கடை களுக்கு எதிராக போராடுகிறார்கள். சமூக நீதிப் போராட்டம் இது. மக்களின் வருவாயை, உடல் மற்றும் மன ஆரோக் கியத்தை சுரண்டுகிறது மது. சுரண்டலுக்கு எதிராகப் போராடுகிறார்கள் மக்கள்.

இவ்வாறு போராடிய பெண்ணை காவல் துறை அதிகாரி தாக்கியதை அவரது தனிப்பட்ட ஆவேசமாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது. நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலை யில், மாற்று இடங்களில் மதுக்கடைகளை நிறுவுவதில் தீவிரமாக இருக்கிறது தமிழக அரசு. ஒருபக்கம் மது விற்பனை சரிந்துவிட்டது. இன்னொரு பக்கம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் மது ஆலைகளில் கொள்முதலும் உற்பத்தியும் குறைந்துவிட்டது. இவை எல்லாம் ஆட்சியாளர்களை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது. காவல் துறையினர், வருவாய் துறையினர், டாஸ்மாக் பணியாளர்கள் என பல தரப்புக்கும் கடுமையான அழுத்தங்கள் தருகிறார்கள் அவர்கள்.

அதேசமயம் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே அணி திரள்கிறார்கள். பல்வேறு ஊர்களில் சிறு சிறு போராட்டங்களை நடத்துகிறார்கள். நாளுக்கு நாள் மக்களின் திரட்சியும் உணர்வுகளின் வேகமும் அதிகரித்து வருகிறது. மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்சினை என்று சிறு தீப்பொறிகளைப் போல எழும்பும் இந்தப் போராட்டங்கள் ஒட்டுமொத்த தமிழக மக்களை ஒன்று திரட்டிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் ஆட்சியாளர்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் மற்றும் நிலையற்ற ஆட்சி தன்மையும் கூடுதலாக அவர்களை அஞ்ச வைக்கிறது.

எனவே, மக்களின் போராட்டங்களைத் தொடக்க நிலையிலேயே நசுக்கிவிட துடிக்கும் தமிழக அரசின் நிலைப் பாட்டையே காவல் துறை வெளிப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, மதுக்கடைகளுக்கு எதிராக திரளும் பெண்களின் உளவியல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இதைப் பார்க்க வேண்டும். ’போராட்டத்தில் இறங்கினால் பெண்கள் என்றும் பார்க்க மாட்டோம்; கடுமையாக தாக்குவோம்’ என்று தமிழக அரசு கொடுத்திருக்கும் எச்சரிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டும். தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டைதான் காவல் துறை அதிகாரி வெளிப்படுத்தி இருக்கிறார். கடுமையான மன அழுத்தத்தின் வெளிப்பாடு இது. அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்க முடியாது. அவருக்கு மன நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் பொறுப்பும் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இன்று போராட்டங்களில் ஈடுபடும் பலரும் அரசின் கொள்கை முடிவுகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். பண மதிப்பு நீக்கம், விவசாயப் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், அணு உலை திட்டம், அதிகாரிகள் அலட்சியம் என்று ஏதோ ஒன்று அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. திருப்பூரில் தாக்கப்பட்ட ஈஸ்வரியும் தமிழக அரசின் மதுக்கொள்கையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்தான். “என் புருஷன் சம்பாதிக்கிற காசு பூராவும் சாராயக் கடைக்கே போவுது. ரெண்டு புள்ளைங்களை வெச்சிட்டு நான் படுற கஷ்டம் அந்தக் கடவுளுக்கே அடுக்காது...” என்று அழுகிறார்.

குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்ட தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் 2014, ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து மதுக்கடையை மூடச் சொல்லி வழங்கிய தீர்ப்பின் வரிகள் கவனிக்கத் தக்கவை. “இந்த வழக்கில் தொடர்புடைய மதுக்கடை அரசு விதி முறைகளை மீறாமல் அமைக்கப்பட் டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக் கிறது. ஆனால், அரசியல் சாசன பிரிவு 21-ன் கீழ் குடிமக்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாழ அளிக்கப்பட் டிருக்கும் அடிப்படை உரிமையை அது பறித்திருக்கிறது” என்றார்.

ஆம்! இன்று தமிழக மக்கள் அமைதி யாகவும், கண்ணியமாகவும் வாழும் உரி மையை பறித்திருக்கிறது தமிழக அரசு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x