Last Updated : 25 Jan, 2014 12:00 AM

 

Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

நாடாளுமன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத கட்சியாக மாறிவிட்ட தேமுதிக

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக கூட்டணி தவிர்த்த அனைத்துக் கட்சிகளாலும் தவிர்க்க முடியாத கட்சியாக தேமுதிக உருவெடுத்துள்ளது.

தேர்தல் கூட்டணி அமைக்கும் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதுவரை ஆளும் அதிமுக மட்டுமே கம்யூனிஸ்டுடன் சேர்ந்து கூட்டணியை அமைத்துள்ளது. மற்ற கட்சிகள், நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சு நடத்தி வருகின்றன.

இந்த தேர்தல் பரபரப்பு தொடங்குவதற்கு முன்பாக வரிசையாக 7 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக மாறியது, கட்சியின் மூளையாக செயல்பட்டு வந்த அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் டிசம்பர் 10-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தது போன்றவற்றால் அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்து சோர்வடைந்திருந்தது தேமுதிக.

ஆனால், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு தொடங்கி யதுமே, தேமுதிக-வுக்கு மவுசு ஏற்படத் தொடங்கிவிட்டது. டிசம்பர் 15-ம் தேதி தொடங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கருணாநிதி அறிவித்தார். அப்படி அறிவித்த நிலையில், வலுவான அதிமுக அணியை தேர்தலில் எதிர்கொள்ள, தேமுதிக-வுடன் கூட்டு வைப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று திமுக கருதியது. இதன் தொடர்ச்சியாகவே, “தேமுதிக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்” என்று திமுக தலைவர் கருணாநிதி வெளிப்படை யாகவே அறிவித்தார். அதே கருத்தையே மு.க.ஸ்டாலினும் வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கிடையே, பாஜக கூட்டணிக்கு தேமுதிக-வை, இழுக்க, மதிமுகவும், பாஜகவும் தீவிரமாக முயற்சியைத் தொடங்கி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படி தேமுதிக-வுக்கு பல் வேறு கட்சிகளும் சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருந்த நிலையில், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மு.க. அழகிரி கருத்து கூறியிருந்தார். இது திமுக தலைமைக்கு நெருக் கடியை ஏற்படுத்தியது.

“அது அழகிரியின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல” என்று கருணாநிதி உடனே அறிக்கை வெளியிட்டார். திமுக-வுடன் கூட்டணி சேர்ந்து விடும் என்கிறரீதியிலேயே அணுகுமுறை கடைப்பிடித்து வந்த தேமுதிக, அழகிரியின் கருத்தால் கடுப்படைந்தது. இதனால் தேமுதிக-வை, திமுக கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சி பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, மதிமுக தலைவர் வைகோவை சந்தித்த பாஜக தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக தங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வரும், என்று சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்தார். இப்படி மாறி, மாறி, தேமுதிகவுடன் கூட்டணி சேர பல கட்சிகளும் போட்டி போட்டு அழைத்து வருகின்றன.

இந்நிலையில், மு.க.அழகிரியை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அழகிரியை கடுமையாக சாடி யுள்ளார். கட்சியின் மிக பலம் வாய்ந்தவராக கருதப்பட்ட, கட்சித் தலைவரின் மகனான அழகிரி வெளியேற்றப்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக தேமுதிக விளங்கியுள்ளது. மேலும், தேமுதிக தங்கள் வேட்பாளரை நிறுத் தினால் மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் திருச்சி சிவாவின் வெற்றியும் பாதிக்கப்படும் என்பதை திமுக உணர்ந்தே உள்ளது.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக தேமுதிக வளர்ந்துவிட்டதைக் காட்டுவது போலவே தமிழக அரசியலில் காட்சி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x