Published : 08 Dec 2013 09:45 AM
Last Updated : 08 Dec 2013 09:45 AM
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
ஏற்காடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 21-வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் சரோஜா 142,771 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மாறன் 64,655 பெற்றார்.
யாருக்கும் வாக்கு இல்லை என்பதைப் பதிவு செய்யும் நோட்டா வசதியில் 4,431 வாக்காளர்கள் பதிவு செய்திருந்தனர்.
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாள் கடந்த ஜூலை மாதம் இறந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 4-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஏற்காடு தொகுதியில் மொத்தம் 2,40,290 வாக்குகள். இந்த தேர்தலில் ஆண்கள் 1,05,620 பேரும், பெண்கள் 1,08,820 பேரும், திருநங்கை நான்கு பேர் என மொத்தம் 2,14,444 பேர் வாக்களித்தனர். 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஏற்காடு இடைத்தேர்தல் சட்டசபையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்தகால இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சியே வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக தவிர்த்து எந்தக் கட்சியும் போட்டியிடாத நிலையில், யார் கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. வேட்பாளர் டெபாஸிட்டை இழக்க வைக்க வேண்டும் என்பது ஆளும் கட்சி குறிக்கோளாக கொண்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் எதிரணியினர் வாக்கு வித்தியாசத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து, ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுக்க தி.மு.க. திட்டமிட்டு பணியாற்றியதும் கவனத்துக்குரியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT