Published : 15 Feb 2014 09:44 AM
Last Updated : 15 Feb 2014 09:44 AM
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தை வியாழக்கிழமை சந்தித்து மனு கொடுத்தனர்.
தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கறிஞர் பகத் சிங் உள்ளிட்டோர் காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், அண்மையில் மதுரை வந்திருந்த மத்திய தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனைச் சந்தித்த இவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதையடுத்து, “நீங்கள் டெல்லிக்கு வந்தால் இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமே நேரில் பேசி தீர்வு காணலாம்'' என நாச்சியப்பன் கூறி இருக்கிறார். இதையடுத்து, பகத்சிங், ஷாஜி செல்லம், நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமையில் மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் 18 பேர் டெல்லி சென்றனர். அவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திடம் அழைத்துச் சென்ற சுதர்சன நாச்சியப்பன், அவர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதிக்கு எடுத்துச் சொன்னார்.
அதற்கு, “தமிழில் வாதாடலாம் என்ற நிலை வந்தால் தீர்ப்புகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். தமிழில் வெளியாகும் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதில் சிக்கல் இருக்கிறது. தமிழில் தீர்ப்பு எழுதும் நடைமுறையை கொண்டுவர நிதிச் செலவும் ஏற்படும்'' என்று சொன்ன தலைமை நீதிபதி, “நான் தமிழனாக இருப்பதால் மட்டுமே இந்த விஷயத்தில் உடனடியாக ஒரு முடிவெடுத்து விட முடியாது. தமிழை அனுமதித்தால் மற்ற மாநிலத்தவரும் தங்கள் மொழிக்கு அந்த அந்தஸ்தை கேட்கலாம். எனவே இந்த விஷயத்தில் நிதானமாகவே முடிவெடுக்க முடியும்'' என்று கூறியிருக்கிறார்.
அதற்கு, “தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியபோது மத்திய அரசு ஒதுக்கிய சிறப்பு நிதியில் இன்னும் பாக்கி இருக்கிறது. தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கு அதைப் பயன்படுத்தலாம். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட பிறகு கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி களுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதேபோல், தமிழ் வழக்காடு மொழியாகும்போது மற்ற மாநில மொழிகளுக்கும் படிப்படியாக அந்த அந்தஸ்தை வழங்கிவிடலாமே'' என்று யோசனை தெரிவித்திருக்கிறார் நாச்சியப்பன்.
தொடர்ந்து பேசிய வழக்கறி ஞர்கள், “ஏற்கெனவே நான்கு மாநிலங்களில் பிராந்திய மொழிகள் வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழும் அங்கீகரிக் கப்பட வேண்டும். உங்கள் காலத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வராமல் போனால் இனி எப்போதும் நடக்காது'' என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, “இதுகுறித்து உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பட்டும். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கலாம்'' என்று கூறியிருக்கிறார் தலைமை நீதிபதி.
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தில் அதற்கென உள்ள மூன்று உறுப்பினர்கள் கொண்ட நீதிபதிகள் குழுவும் கருத்துரு அனுப்ப வேண்டும். இந்தக் குழுவில் உள்ள நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, நாகப்பன், உபாத்தியாயா ஆகியோரையும் மதுரை வழக்கறிஞர்கள் குழு வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT