Published : 30 Mar 2014 03:22 PM
Last Updated : 30 Mar 2014 03:22 PM

இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு மீனவர்கள் எவரும் இறக்கவில்லை: மீன்துறை இயக்குநரகம்

"இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்த மற்றும் காயம் அடைந்த மீனவர்கள் எவரும் இதுநாள் வரை இல்லை" என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விண்ணப்பத்திற்கு, மீன்துறை இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தே.ராஜீ. இவர் ராமநாதபுரம் மாவட்ட கடல் எல்லையில் இலங்கை ராணுவத்தினரால் 1947 முதல் 2013 ஆம் ஆண்டு வரை சுடப்பட்டு இறந்த மீனவர்களின் எண்ணிக்கை, காயம்பட்ட மீனவர்களின் பெயர், அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை, மீனவர்களை சுட்ட இலங்கை ராணுவத்தின் மீது இந்திய அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களைத் திரட்ட முயற்சித்தார்.

இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்படி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விபரங்களை கோரி மனு செய்தார். இந்த விண்ணப்பக் கடிதத்தை, மாவட்ட மீன்துறை உதவி இயக்குநருக்கு அனுப்பப்பட்டு, மனுதாரர் ராஜீக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து, மனுதாரர் ராஜீக்கு ராமநாதபுரம் வடக்கு மீன்துறை உதவி இயக்குநர் அளித்த தகவலில், 'இவ்வலுலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்த மற்றும் காயம் அடைந்த மீனவர்கள் எவரும் இதுநாள் வரை இல்லை என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் கூறும்போது, "படுகொலை செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பாக ஊடகங்களும், மீனவ அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எண்ணிக்கையை மாற்றி மாற்றி கூறி வருகின்றன.

இதுவரை படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் விவரங்கள், தாக்கப்பட்டவர்களின் விவரங்கள், காயங்களின் விவரம், படகு எண்கள், சம்பவ நேரங்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை பற்றிய அடையாளங்கள், காயமடைந்தவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை விவரமாக ஆவணப்படுத்துவது அவசியம்.

மேலும், இக்குழப்பங்களை தீர்க்கும் விதத்தில் அரசு அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து சரியான தகவல்கள் அளிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x