Published : 21 Dec 2013 09:40 PM
Last Updated : 21 Dec 2013 09:40 PM
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகளின் அட்டகாசத்தால் மா, தென்னை மற்றும் கொய்யா தோப்புகள் சேதமடைந்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை எல்லைப் பகுதியான ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் முதல் சாப்டூர் வரையிலான பகுதிகளில் காட்டு யானைகள், பன்றிகள், மான்கள், மிளா, காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றன. வறட்சி, பருவநிலை மாற்றம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், வனப்பகுதிக்குள் சுற்றித் திரியும் விலங்குகள் அவ்வப்போது, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து விடுகின்றன.
இதனால், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்தி விடுகின்றன. இது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில், விருதுநகர் மாவட்டம் செண்பகத் தோப்புப் பகுதியில் மகாலிங்கம் என்பவரின் கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியது. ராஜபாளையம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் கல்லாறு ஆற்றுப்படுகை மற்றும் நல்லிக்காடு பகுதிகளிலுள்ள வாழைத் தோட்டத்திற்குள் யானைக் கூட்டம் புகுந்து சேதப்படுத்தின.
தொடர்ந்து, புரசம்பாறை பகுதியில் உள்ள வாழைத் தோட்டம் மற்றும் கல்லாறு பகுதியில் உள்ள ராக்காச்சியம்மன் கோயில் அருகேயுள்ள கரும்பு மற்றும் வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்த யானைகள் வாழை மரங்களையும், கரும்புகளையும் அண்மையில் சேதப்படுத்தின. இந்நிலையில், திருவில்லிபுத்தூர் அருகே திருவமண்ணாமலை பகுதியிலுள்ள வெங்கடேஸ்வர கிராமம் பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் மா, தென்னை மற்றும் கொய்யாத் தோப்புகள் ஏராளமாக உள்ளன. கடந்த 2 நாள்களாக இப்பகுதி தோப்புகளுக்குள் புகுந்த யானை மா மற்றும் கொய்யா மரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தியுள்ளன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பி.அய்யாச்சாமி கூறுகையில், மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரம் என்பதால் இப்பகுதி தோப்புகளுக்குள் யானைகள் புகுந்து மரங்களை சேதப்படுத்துகின்றன. கடந்த 3 மாதங்களாக, யானைகளின் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்.
மா மற்றும் கொய்யா மரங்களில் காய்கள் காய்த்திருக்கும் பருவத்தில் கிளையோடு யானைகள் ஒடித்து விடுகின்றன. இதனால் பல லட்ச ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, யானைகளை விரட்ட பட்டாசுகளை வெடித்தும், தீப்பந்தங்கள் கொளுத்தியும் முயற்சி செய்தாலும் காட்டுக்குள் செல்லும் யானைகள் மீண்டும் இறங்கி வந்து விடுகின்றன. இதுகுறித்து வனத்துறையினரிடம் தெரிவித்தாலும் இதே நிலைதான் தொடர்கிறது.
எனவே, யானைகளை காட்டுக்குள் அனுப்பி மீண்டும் அவை தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாத வகையில் வனத்துறையினர் நிரந்தரமான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT