Published : 16 May 2017 07:43 PM
Last Updated : 16 May 2017 07:43 PM

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த எதிரொலி: ஆம்னி, தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் போட்டி?

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தத்தினால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவி மக்கள்தான். கோவையிலிருந்து திருப்பூருக்கு ஒரு தனியார் பேருந்தில் பயணிக்கு ரூ.30 டிக்கெட் கட்டணத்துக்குப் பதிலாக ரூ.200 வரை வசூலித்த கொடுமை நடந்துள்ளது. அதேபோல் காலை 7.30 மணிக்கு பெங்களூர் செல்லும் பேருந்தில் ரூ.600க்கு கட்டணம் செலுத்தி பயணித்த பயணியும், அதே பெங்களூருக்கு டிக்கெட் ரூ.2000 கொடுத்து பயணித்த இளைஞர்களும் இருக்கிறார்கள்.

இந்த கட்டணக் கொள்ளை மாவட்டத்திற்கு மாவட்டம், நகரத்திற்கு நகரம் மாறியிருக்கிறது. இதில் தனியார் பேருந்துகளின் மீதும், ஆம்னி பேருந்துகளின் மீதும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருப்பதோடு, இவர்களுக்கு இப்படியொரு அனுமதியை கொடுத்து வேடிக்கை பார்ப்பதே அரசும் அதிகாரிகளும்தான் என்கிற குற்றச்சாட்டுகளும் மேலோங்கியிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கும் பொறுப்பாளர்களிடம் பேசியதில் ஆச்சர்ய தகவல்கள் பல கிடைத்தன.

அது குறித்த முழுமையான ரிப்போர்ட்:

கோவை மாவட்டத்தில் மட்டும் 30 இருக்கைகள் முதல் 36 இருக்கைகள் வரை வசதி கொண்ட சுமார் 400க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றை சுமார் 20 தனியார் நிறுவனங்களே நடத்துகின்றன. இதேபோல் தமிழகம் முழுக்க 5 ஆயிரத்திற்கும் மேலான ஆம்னி பேருந்துகள், பல்வேறு தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. இவற்றில் மிகுதியான பேருந்துகள் சென்னையிலிருந்தே வருகின்றன. பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், எர்ணாகுளம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு மட்டுமே செல்லும் இந்த பேருந்துகளில் ரூ.600 முதல் 1000 வரை ஒரு பயணிக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளைப் பொறுத்தவரை தமிழகத்திலும், கேரளத்திலும் வாகனப்பதிவு செய்யப்படுவதில்லை. எனவே இவற்றை பாண்டிச்சேரியில் பதிவு செய்து மற்ற மாநிலங்களில், இருக்கைக்கு குறிப்பிட்ட ஒரு கட்டணம் செலுத்தி ஓட்டி வருகிறார்கள். இதனாலேயே கூடுதல் கட்டணம் அதற்கு வசூல் செய்யப்படுவதாக தெரிவிக்கிறார்கள் ஆம்னி பேருந்தை இயக்குபவர்கள். இப்படி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் இரட்டை ஓட்டுநர்கள் உண்டு. இந்தப் பேருந்துகளுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படுகிறது. அதை இணையத்தில் அனைவரும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே பயணப்படும் இந்த பேருந்துகளை இயக்கும் டிரைவர்கள் அடுத்தநாள் காலை சென்று சேரும் நகரத்திலேயே 4 மணிநேரம் முதல் 8 மணி நேரம் வரை ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு அந்த நாள் இரவை பயணத்தில் கழிப்பது வழக்கம். இப்படி இயங்கும் பேருந்துகள் எங்காவது பழுதாகி நின்று விட்டால் மாற்று ஏற்பாடாக 10 பேருந்துகளுக்கு 2 ஸ்பேர் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுவனங்கள் வைத்திருப்பது உண்டு. இப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட் கட்டணத்தை தாண்டி திடீரென்று இந்த ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்திட முடியாது.

இதே நேரத்தில் இந்த வேலை நிறுத்தத்தினால் பொதுமக்களிடம் ஏற்படும் அதிருப்தியை சரிகட்டும் முகமாக கூடுதல் ஆம்னிகளை இயக்கும்படி அந்தந்த வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களிடமிருந்தும், மாவட்ட நிர்வாகத்திடமிருந்தும் வாய்மொழி உத்தரவுகள் போடப்படுகின்றன. அதையொட்டி ஸ்பேராக இருக்கும் சில பேருந்துகளை பகலிலும் இயக்க வேண்டி உள்ளது. அதற்கு இரவு முழுக்க பணி செய்த ஓட்டுநர்களையே கொண்டு ஓட்ட வைப்பதும், விடுமுறையில் இருக்கும் ஸ்பேர் டிரைவர்களை கட்டாயமாக வரவழைத்து ஓட்ட வைப்பதும், மாநகரங்களில் காலையில் சென்று சேரும் பேருந்துகளை அங்கேயே காலை முதல் மாலை வரை வேறு ரூட் போட்டு ஓட்டச்செய்வதும் நடக்கிறது.

இதற்கேற்ப ஆங்காங்கே அந்தந்த கம்பெனிகளின் நடைமுறைக்கேற்ப வசூல் செய்யப்படுகிறது. இதனால் பெரிய லாபம் ஏதும் ஆம்னி பேருந்துகளுக்கு இல்லை. ஆட்சியாளர்களின் நெருக்கடியாலேயே நெருக்கடியுடன் இதை செய்ய வேண்டியிருக்கிறது என தெரிவிக்கிறார்கள் ஆம்னி பேருந்து இயக்கும் சில கம்பெனியை சேர்ந்தவர்கள்.

(கோவை சத்தி சாலையில் ஓய்வுக்காக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள்.)

இதுகுறித்து நம்மிடம் பேசிய 200க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கும் ஒரு நிறுவனத்தின் மண்டல மேலாளர், ''மற்ற ஆம்னி பேருந்து கம்பெனிகள் இரவு நேரப் பேருந்துகள் மட்டும் இயக்கினாலும், நாங்கள் பகலிலும் வெளியூர், வெளிமாநில நகரங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறோம். உதாரணமாக கோவையிலிருந்து காலையிலும், மாலையிலும் பெங்களூருவுக்கும், சென்னைக்கும், ஹைதராபாத்திற்கும் தலா இரண்டு பேருந்துகளை இயக்குகிறோம். இதே நேரத்தில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்திலும் தலா 2 பேருந்துகள் கோவைக்கு புறப்படுகின்றன. இதேபோல் மதுரை, திருச்சி, நெல்லை போன்ற முக்கிய நகரங்களிலிருந்தும் காலை மாலை பேருந்துகள் புறப்படுகின்றன. எனவே எங்கள் நிறுவனத்தில் இப்படி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கென ஸ்பெஷலாக ரூட் போட்ட ஓட்ட பேருந்துகளே கிடையாது!'' எனக் குறிப்பிட்டார்.

மேலும் சில ஆம்னி பேருந்து கம்பெனிகளில் பணிபுரியும் அலுவலர்கள் இதுகுறித்துப் பேசுகையில், ''ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை ஒரு எல்லைக்கு மேல் தாண்டி வசூல் செய்ய முடியாது. அதேசமயம் தற்போது தடத்தில் ஓடும் (ரூட்டில்) தனியார் பேருந்துகள்தான் வசூலில் கொழிக்கின்றன. பொதுவாகவே தனியார் பேருந்துகள் அனைத்தும் டூரிஸ்ட் என்ற பர்மிட்டில் நிறைய ஸ்பேர் வண்டிகளை வைத்திருக்கிறது. தேவைப்படும் காலத்தில் அவை சுற்றுலா புக்கிங் செய்து செல்லும். அதற்கான பர்மிட்டை உள்ளூர் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகளே அளிக்கிறார்கள். அதே வண்டிகள்தான் தனியார் ரூட் பஸ்கள் ரிப்பேராகி எங்காவது நின்றுவிட்டால் உடனே ஸ்பேர் பஸ்களாகவும் இயக்கப்படுகின்றன. அப்படி தனியார் பேருந்து உரிமையாளர்கள் 10 ரூட் பஸ் வைத்திருந்தால் அதற்கு சரிசமமாக டூரிஸ்ட் மற்றும் ஸ்பேர் பஸ்கள் வைத்துள்ளார்கள்.

இப்போது வேலைநிறுத்தம் தொடங்கியவுடன் அவர்களைத்தான் உடனடியாக டூரிஸ்ட் மற்றும் ஸ்பேர் பஸ்களை ரூட்டில் ஓட்டும்படி அதிகாரிகள் பணிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது அத்தனை டூரிஸ்ட் பஸ்களும் ரூட்டில் ஓட ஆரம்பித்து விட்டன. ஏற்கெனவே 60 சீட்டுகளுக்கு பதிலாக 80 சீட்டுகளை ஏற்றிக்கொண்டு ஓவர் லோடுடன் பயணித்து லாபம் காணும் கம்பெனிகளின் காட்டில்தான் இப்போது மழை.

ஒற்றைக்கு ரெட்டையாக பேருந்துகள். இரண்டு மடங்கு மூன்று மடங்கு கட்டணம் என ஜமாய்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மாநில அளவில் பர்மிட் வாங்கும் எங்கள் ஆம்னி பேருந்துகள்தான் டூரிஸ்ட் பர்மிட்டில் இயங்குகின்றன. எங்களுடைய பேருந்தைத்தான் டூரிஸ்ட் பஸ் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் வைத்துள்ளதை ஸ்பேர் பஸ் என்றே சொல்ல வேண்டும். அதை விட்டு உள்ளூர் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகளே அவர்களுக்கு கதவை திறந்து விடும்போது எப்படி, எந்த ரூட்டில், எந்த ரேட்டில் வேண்டுமானாலும் ஓட்டலாம். யார் கேட்க முடியும்?'' என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து தனியார் ரூட் பஸ் மற்றும் டூரிஸ்ட் பேருந்துகளை ரூட்டில் ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் சிலரிடம் கேட்டபோது, ''வேலை நிறுத்தத்தின் முதல்நாள் எல்லா வண்டிகளும் ஓவர் லோடு ஏற்றிச் சென்றதும், சில பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்ததும் உண்மை. ஆனால் 2-வது நாள் பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த அளவுக்கு டூரிஸ்ட் பஸ்களும், ஸ்பேர் வண்டிகளும் இறங்கி விட்டன. போதாக்குறைக்கு ஆம்னி வேன்கள் நிறைய இயங்கத் தொடங்கிவிட்டன. தவிர அரசு பேருந்துகளும் கூடுதலாகவே தற்காலிக டிரைவர்களை கொண்டு இயங்க ஆரம்பித்து விட்டன. எனவே தற்போது எப்போதும் போலத்தான் கூட்டம் சேருகிறது. கட்டணமும் நார்மலாகத்தான் வசூலிக்கப்படுகிறது!'' எனத் தெரிவித்தனர்.

இந்த ஆம்னி பேருந்துகள், தனியார் பேருந்துகள் அடிக்கும் கட்டணக் கொள்ளை குறித்து குறிப்பிட்ட கோவை கல்வியாளர் ஒருவர் வேடிக்கையாக, அதே சமயம் சீரியஸாக ஒரு கருத்தை தெரிவித்தார். அவர் தெரிவித்தது:

''இதேபோல் 5 வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தீபாவளிக்கு நெருக்கமான தினத்தில் நடந்தது. அப்போது அரசு சுதாரித்துக் கொண்டு இதேபோல் ஆம்னி மற்றும் தனியார் ஸ்பேர் பஸ்களை இயக்கச் சொன்னது. அத்துடன் கூடுதலாக அனைத்துக் கல்லூரி, பள்ளிகளில் உள்ள பேருந்துகளையும் ரூட்டில் இயக்கச் சொல்லி கல்லூரி தாளாளர்களுக்கு வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தது.

அதற்கேற்ப பள்ளி, கல்லூரி பேருந்துகளும் ரூட்டில் இயங்கி பொதுமக்கள் சிரமத்தை தவிர்த்தது. இந்த முறை ஏனோ அப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கவில்லை. இப்போது கல்லூரிகள், பள்ளிகள் கோடை விடுமுறை. கோவையில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான பள்ளிப் பேருந்துகள் வெறுமனேதான் நிற்கிறது. அதற்கு நடத்துநர், ஓட்டுநர்களும் உள்ளனர். அந்த பேருந்துகளையும், அதன் டிரைவர் கண்டக்டர்களையும் இன்னமும் பயன்படுத்தாமல் அரசு இயந்திரம் முடுக்கி விடாமல் இருப்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது!'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x