Published : 28 Feb 2017 09:52 AM
Last Updated : 28 Feb 2017 09:52 AM

அழியும் அபாயத்தில் பாரம்பரிய மதுரை மல்லி: செடிகளை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கவலை

வறட்சியால் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் பாரம்பரியமாக பயிரிடப்பட்டுள்ள மதுரை மல்லிப்பூ செடிகள் அழியும் அபாயத்தில் இருக்கின்றன.

தமிழகத்தில் மதுரை, திண்டுக் கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் கோவை உட்பட பரவலாக 80 ஆயிரம் ஏக்கர் வரை மல்லிப்பூ சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மல்லிகை இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் மதுரை மல்லிகைக்கு மதுரையில் மட்டுமின்றி உலகளவில் தனிச் சிறப்பு உண்டு.

மதுரை, ராமநாதபுரம், திண்டுக் கல் மாவட்டங்களில் விளைவிக்கப் படும் மதுரை மல்லிகை குண்டு குண்டாக வெள்ளை நிறத்தில், இதழ் தடிமனாய், எளிதில் உதிராமல் இரண்டு, மூன்று நாட்கள் கூட வைத் திருந்தாலும் வாடாமல் இருக்கும். மதுரை மல்லிப்பூ செடிகளின் இந்த சிறப்பை அறிந்த மலர் உற்பத்தியாளர்கள், மதுரையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லிகைப் பூச்செடிகளை தங்கள் நாடுகள், மாநிலங்கள், மாவட்டங் களில் விளைவிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதியான சாகுபடி பரப்பு

இப்படி பல சிறப்புகளைப் பெற்ற மதுரை மல்லிக்கு கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே மதுரை மல்லிக்கு போதிய மழையில்லாமல் சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதம் முன்பு வரை, தண்டு துளைப்பான் பூச்சியால் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதனால், கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 2016-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் 50 சதவீதம் மதுரை மல்லி சாகுபடி பரப்பு குறைந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக மழையில்லாமல் தமிழ கத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு மதுரை மாவட்டமும் தப்பவில்லை. இங்கு சராசரியாக 850 மி.மீ. மழை பெய்ய வேண்டும். இதில் 50 சதவீதம் கூட கடந்த ஆண்டில் பெய்யவில்லை. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை கடந்த நவம்பர் வரை 174 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால், சராசரியாக 8 மி.மீ. மட்டுமே பெய் துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங் களில் மழையே பெய்யவில்லை. வைகை, பெரியாறு அணைகளில் இந்த ஆண்டு மதுரை பாசனத் துக்கு தண்ணீர் திறக்கவே இல்லை. நிலத்தடி நீர் மட்டமும் பாதாளத்துக்கு சென்றதால் மல்லிப்பூ செடிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுரை மாவட்ட வருவாய்த் துறை வறட்சி பாதிப்பு குறித்து நடத்திய கணக்கெடுப்பில் மதுரை மாவட்டத்தில் 1,471 ஹெக்டேரில் மட்டுமே மதுரை மல்லி பயிரிடப்பட்டு இருப்பதும், அந்த செடிகளும் வறட்சியின் பிடியில் சிக்கி அழியும் அபாயத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இடைத்தரகர்களுக்கே லாபம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அருகே குள்ளிசெட்டிப் பட்டியைச் சேர்ந்த விவசாயி பாலசந்திரன் கூறியதாவது:

நான் 2 ஏக்கரில் மல்லிகைப்பூ சாகுபடி செய்துள்ளேன். பெரும் பாலான செடிகள் காய்ந்து விட்டன. இன்று 2 ஏக்கரில் (நேற்று) ஒன் றரை கிலோ பூக்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சந்தையில் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை மட் டுமே விலை கிடைக்கிறது. வியாபாரி களுக்கும், இடைத் தரகர்களுக் கும்தான் பூ வியாபாரத்தில் லாபம் கிடைக்கிறது என்று கூறினார்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 150 ஆண்டில் 70-களில் ஏற்பட்ட வறட்சிக்குப் பிறகு தற்போது மீண்டும் கடுமையான வறட்சி காணப் படுகிறது. அதுவும் ஜனவரி மாதமே குடிநீர் பஞ்சம், பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாய கிணறுகள், அணைகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. அத னால், இது மிகப்பெரிய வறட்சியின் காலமாக கருதப்படுகிறது.

இந்த வறட்சிக்கு மல்லிப்பூச் செடிகளும் இலக்காகி வாடுகிறது. பூக்கள் உற்பத்தி குறைகிறது. கடுமையான வறட்சியால் செடிகள் கருகி விடுகின்றன. தர மில்லா பூக்கள் உற்பத்தி ஏற்படு கிறது. அடுத்த ஆண்டுக்கும் இந்த வறட்சியின் பாதிப்பு நீடிக்கும் அபாயம் உள்ளது. ஒட்டுமொத்த மாக பெரிய மகசூல் இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இயற்கையாக மழை பெய்தால் மட்டுமே மல்லிப்பூ செடிகளைக் காப்பாற்ற முடியும். குடிப்பதற்கே சிக்கல் ஏற்பட்டுள்ளதால் செடிகளை காப்பாற்றுவது விவசாயிகளுக்கு பெரும் போராட்டம்தான் என்று கூறினர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x