Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

சென்னையில் அதிநவீன வசதிகளுடன் 100 ஆட்டோக்கள் தொடக்கம்:விரைவில் ஏ.சி. ஆட்டோ இயக்க திட்டம்

சென்னையில் ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 100 ஆட்டோக்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்முறையாக ஏ.சி. வசதியுடன் கூடிய ஆட்டோக்களை மக்கள் ஆட்டோ நிறுவனம் விரைவில் இயக்கவுள்ளது.

மக்கள் ஆட்டோ நிறுவனம் சார்பில் பெண்களுக்காக பெண்களே ஓட்டும் 25 ஆட்டோ உட்பட 100 ஆட்டோக்களின் தொடக்க விழா அடையாரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கல்லூரியில் திங்கள் கிழமை நடந்தது.

மக்கள் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.சஹிதா பேகம் வரவேற்புரை ஆற்றினார். நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு ஆட்டோக்களை தொடங்கிவைத்து வாழ்த்தி பேசினார்.

இது தொடர்பாக மக்கள் ஆட்டோ நிறுவன தலைவர் ஏ.மனு சூர்அலிகான் கூறியதாவது:

மற்ற துறைகளில் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆட்டோ தொழிலில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படவில்லை.

போக்குவரத்து தேவையில் முக்கிய பங்காற்றி வரும் இந்த தொழிலை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். முதல்முறையாக பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் பெண்களுக் காக பெண்களே ஓட்டும் 25 ஆட்டோக்கள் உட்பட மொத்தம் 100 ஆட்டோக்களை தற்போது தொடங்கியுள்ளோம்.

இந்த ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். (வாகன நகர்வு கண்காணிப்பு) கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்டோக்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத் தும் வசதியும் உள்ளது.

இந்த ஆட்டோவில் ஓட்டுநர் பெயர், முகவரி, அவசர தொலை பேசி எண் ஆகியவை இடம் பெற்று இருக்கும். அரசு நிர்ணயித்துள்ள மீட்டர் கட்டணமே வசூலிக்கப்படும். கட்டணத்திற்கான ரசீதும் அளிக்கப் படும். பொழுதுபோக்கு அம்ச மாக டி.வி. நிகழ்ச்சிகள், பாட்டு, செய்திகளையும் கேட்க முடியும். மற்ற மாநகரங்களிலும் இத்திட் டத்தை விரிவுபடுத்தவுள்ளோம். அடுத்த 3 மாதங்களில் 1000 ஆட்டோக்களில் இந்த தொழில் நுட்பத்தை கொண்டு வரவுள்ளோம்.

அடுத்ததாக ஏ.சி. வசதியுள்ள ஆட்டோக்களை இயக்கவுள்ளோம். முதல்கட்டமாக 50 ஆட்டோக்கள் இயக்கப்படும். பின்னர், மக்களின் தேவைக்கேற்ப அதிகமான ஆட்டோக்களில் ஏ.சி. வசதி கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம். ஏற்படும் கூடுதல் செலவுகளை ஆட்டோக்களில் திரையிடவுள்ள விளம்பரங்கள் மூலம் சரிசெய்து கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x