Published : 29 Jul 2016 12:25 PM
Last Updated : 29 Jul 2016 12:25 PM
ஓசூரில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை இன்று காலை 10 மணியை கடந்தும் மழை பொழிவு உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கடந்த 26ம் தேதி இரவு பெய்த கனமழையால் நகரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளனார்கள். கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி, ஓசூர் பகுதியில் பெய்த கனமழையால் தளி பெரிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, தார்ச்சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஓசூரில் 141 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கதிரவன், சார் ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ் ஆகியோர் தலைமையில் நகராட்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணிநேரம் போராடி வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்டனர். இந்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வௌத்தில் சிக்கி, வனிதா, தர்ஷினி, நந்தகுமார் உட்பட 3 பேர் பலியானார்கள். இந்நிலையில், இந்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒருவரது சடலம், கெலவரப்பள்ளி அணை கால்வாயில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 40 வயதுடைய ஆண் பிரேதத்தை அட்கோ போலீஸார் மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சார பாதிப்பு:
ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய பெய்த மழையால் ஓசூர் நகர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளனார்கள். தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. ஏற்கனவே பெய்த மழையால் நிரம்பி வழியும் ஏரிகளான சந்திராம்பிகை ஏரி, சின்னஎலசகிரி காமராஜ் ஏரி, தர்கா ஏரி ஆகியவை மழையால் நிரம்பி வழிந்தப்படி உள்ளதால், மணல் மூட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தொடர் மழை காரணமாக, ஓசூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார். வழக்கம் போல், மழையைப் பொருட்படுத்தாமல் பள்ளிக்கு செல்ல தயாராக இருந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளனார்கள். பல பகுதிகளில் சாலை சேதமடைந்துள்ளது. மின்பாதைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணிக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் பலர் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஓசூரில் வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்ககை பாதிக்கப்பட்டுள்ளது.
மழைஅளவு:
ஓசூர் மற்றுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மழைஅளவு மில்லிமீட்டரில்: ஊத்தங்கரை- 56, பெணுகொண்டாபுரம் - 82.40,போச்சம்பள்ளி - 38.50, கிருஷ்ணகிரி - 67.40, நெடுங்கல் - 42.40, பாரூர் - 52.50,சூளகிரி - -80, ராயக்கோட்டை - -73, அஞ்செட்டி - -52.5, ஓசூர் - -42, தேன்கனிக்கோட்டை - -30, தளி -- 20, என மொத்தம் - 636.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT