Published : 09 Feb 2014 03:14 PM
Last Updated : 09 Feb 2014 03:14 PM

`நிதியுதவிக்கு வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டியது அவசியம்

மகப்பேறு நிதியுதவி திட்டப் பயனாளிகள், அரசின் நிதியுதவிகளை பெற, வங்கிக் கணக்கை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது அவசியம் என்றார் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் கே.கிருஷ்ணராஜ்.

காஞ்சிபுரம் சுகாதார மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பயனாளிகள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் கே.கிருஷ்ணராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

“காஞ்சிபுரம் சுகாதார மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 12,932 கர்ப்பிணித் தாய்மார்கள் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 12,028 பேருக்கு (93 சதவீதம்) ரூ.14 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பதிவு செய்திருந்த 3,095 பயனாளிகளுக்கும் (100 சதவீதம்) நிதியுதவி வழங்கப்பட்டுவிட்டது.

தற்போது மகப்பேறு நிதியுதவிகள் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. ஆனால் பயனாளிகளின் கணக்கில் பணம் சென்று சேர்ந்திருக்காது. வங்கியில் விசாரிக்கும்போதுதான், அந்த வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்து ஓராண்டுக்கும் மேல் ஆகியிருப்பது தெரியவருகிறது.

இதனால் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் சென்று சேர்வதில்லை. இதைத் தவிர்க்க, பயனாளிகள், அவர்களது வங்கிக் கணக்கில், பணத்தைச் செலுத்தியும், எடுத்தும், தொடர்ந்து பராமரிக்க வேண்டும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x