Published : 23 Jan 2017 10:20 AM
Last Updated : 23 Jan 2017 10:20 AM

மூட்டு வலி ஏற்படுத்தும் வேதனை பச்சை குத்துவதை சிகிச்சையாக பின்பற்றும் நோயாளிகள்: விழிப்புணர்வு இல்லாததால் தொடரும் அவலம்

மூட்டு வலி, குதிகால் வலி உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு சித்தா, ஆயுர்வேதம், அலோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகள் நீங்கலாக, கிராமப்புற நம்பிக்கைச் சார்ந்த செயல்களைச் சிகிச்சைகளாக முயற்சி செய்யும் வழக்கம் இன்றளவும் சில பகுதிகளில் தொடர்கிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் சிலர் கால் மூட்டு வலி வேதனையில் இருந்து விடுபட, மூட்டு பகுதியில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பெரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் ஒகேனக்கல்லில் வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கால் மூட்டுகளில் தீராத வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு அவர் அலோபதி, மூலிகை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் தீர்வு ஏற்பட வில்லை.

இந்நிலையில், மூட்டு பகுதியைச் சுற்றிப் பச்சை குத்திக் கொண்டால் மூட்டு வலி பிரச்சினையில் இருந்து முழுமையாக விடுபடலாம் என கிராமப் பகுதியைச் சேர்ந்த சிலர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். தொடக்கத்தில் தயங்கிய துரைசாமி, வலியின் கொடுமையைத் தாங்க முடியாத சூழலால், பச்சை குத்தும் சிகிச்சையையும் முயற்சித்து பார்த்துவிட முடிவு செய்துள்ளார். பின்னர் பச்சை குத்துவோரைத் தேடிப் பிடித்து தனது கால் மூட்டுகளைச் சுற்றிப் பச்சை குத்தியுள்ளார். ஆனாலும் அவருக்கு மூட்டு வலி பிரச்சினை தீரவில்லை.

இதுபற்றி துரைசாமி கூறிய தாவது: மூட்டு பகுதியில் ஏற்பட்ட வலிக்கு உள்ளூர் வைத்தியர்களிடம் சிகிச்சை எடுத்துப் பார்த்தேன். நீர்க்கட்டு என்று சில மருந்துகளைக் கொடுத்தனர். அதிலும் வலி முழுமையாக குணமாகவில்லை. மூட்டு மருத்துவரை அணுகியபோது தேய்மானம் ஏற்பட்டிருப்பதால் வலி உருவாகிறது என்றும், அதிகப்படியான ஓய்வு, உடல் எடை குறைப்பு போன்றவற்றையும் பின்பற்றுமாறு கூறினார். உடல் எடை குறைப்பு கூட சாத்தியம். ஆனால், ஓய்வாக இருந்தால் பிழைப்புக்கு வருமானம் வேண் டுமே. அதனால், வலியை தாங்கிக் கொண்டே தொழிலைக் கவனித்து வந்தேன்.

இடையில் சிலர், மூட்டு பகுதியைச் சுற்றி பச்சை குத்தினால் வலி பூரணமாக குணமாகி விடும் என்று கூறினர். எனவே பச்சை குத்தும் வைத்தியத்தையும் பார்த்து விட முடிவு செய்தேன். விழா நாட்களில் அதிக கூட்டம் கூடும் பகுதிகளுக்கு வரும் பச்சை குத்தும் தொழிலாளிகளைப் பார்த்து விவரத்தைக் கூறினேன். மூட்டுவலிக்கு இதுபோல் பச்சை குத்தி பலருக்கு வலி குணமாகியுள்ளதாக அவர்களும் கூறினர். எனவே, எனது முழங்கால் மூட்டு பகுதியில் பச்சை குத்திக் கொண்டேன். இதற்கு ரூ.350 முதல் ரூ.500 வரை பலவிதமாக கட்டணம் பெறுகின்றனர்.

பச்சை குத்தி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எனக்கு மூட்டு வலி குறையவில்லை. வலி தரும் வேதனையால், காதில் கேட்பதையெல்லாம் எங்களைப் போன்ற முதியவர்கள் சிகிச்சையாக முயற்சித்து பார்க்கிறோம். முயன்ற பிறகே அது பலனளிக்காத சிகிச்சை என்று தெரிய வருகிறது. பிறகு வேறு வழியின்றி வலியுடனேயே நாட்களை நகர்த்துகிறோம் என்று அவர் கூறினார்.

இதுபற்றி அரசு மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘மூட்டு வலி பிரச்சினைக்குப் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் கிராமப் பகுதிகளில் உள்ளது. ஆனால், இது ஒருபோதும் மூட்டு வலி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகாது. பச்சை குத்தப்படும்போது அக்கு பிரஷர் சிகிச்சை முறையைப் போன்ற அழுத்தம் தரப்படும். அது ஒரு சில நாட்களுக்கு மூட்டு வலி குறைந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். ஆனால், பிரச்சினையை இது நிரந்தரமாக போக்காது’ என்று விளக்கமளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x