Published : 01 May 2017 12:04 PM
Last Updated : 01 May 2017 12:04 PM
கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேசுவரம், சென்னை உட்பட தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில், மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. ஆனால் கேரள மற்றும் இலங்கை விசைப்படகுகள் ஆழ்கடலில் முகாமிட்டு மீன்பிடித்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கிலும், ஏப்ரல் 15 முதல் மே 30-ம் தேதி வரை தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியிலும், ஜூன் 15 முதல் ஜூலை 30-ம் தேதி வரை மேற்கு கடல் பகுதியிலும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
நோக்கம் நிறைவேறாது
தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் இருந்து சென்னை வரையிலான கிழக்கு கடல் பகுதிகளில், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. ஆனால், இலங்கை மற்றும் கேரளத்தை சேர்ந்த விசைப்படகுகள் கிழக்கு கடல் பகுதிகளில் முகாமிட்டு மீன்பிடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் எந்த நோக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேற சாத்தியமில்லை என, மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு பாரபட்சம்
கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு மீனவர் சேவியர் கூறும்போது, ‘மீன்பிடி தடைக்காலத்தால் குடும்ப செலவுக்கு கூட சிரமப்பட்டு வருகின்றோம். ஆனால், கிழக்கு கடற்கரை பகுதியில் இலங்கை மற்றும் கேரளத்தை சேர்ந்த விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. தமிழக மீனவர்களுக்கு உள்நாட்டில் மீன்பிடிப்பதற்கே கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு, இவ்விஷயத்தில் பாரபட்சமாக நடந்து வருகிறது. தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் உள்ள நேரத்தில் அங்கு பிற நாடு, மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த விசைப்படகுகள் மீன்பிடித்து வருவதால் தடைக்காலம் அமல்படுத்தி பயனொன்றும் இல்லை’ என்றார் அவர்.
ஏமாற்றப்படுகிறார்களா?
மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘மீன்பிடி தடைக்காலத்தின்போது இந்த ஆண்டு மட்டுமல்ல, ஆண்டுதோறும் இதேநிலை தொடர்ந்து வருகிறது. மீன்வளத்தை காப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப் படுகிறது. ஆனால், இங்குள்ள மீன் வளத்தை இலங்கை நாட்டினரும், கேரள மாநிலத்தினரும் சுரண்டிச் செல்கின்றனர். மீன்பிடி தடைக்காலத்தை முறையாக கடைபிடித்தால் மட்டுமே மீன்வளத்தை காக்க முடியும். இவ்விஷயத்தில் தமிழக மீனவர்கள் ஏமாற்றப்படுகிறார்களா? என்ற ஆதங்கமும் மீனவளத்துறைக்கு உள்ளது’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT