Published : 24 Sep 2016 12:50 PM
Last Updated : 24 Sep 2016 12:50 PM

உசிலம்பட்டி நகராட்சியை அதிமுக மீண்டும் கைப்பற்றுமா?- கடும் போட்டிக்கு திமுக தயார்

உசிலம்பட்டி நகராட்சியை தக்க வைக்கவும், வெற்றியை பறிக்கவும் அதிமுக, திமுகவினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் முக்கிய நகராட்சி உசிலம்பட்டி. இங்கு 24 வார்டுகளும், 30 ஆயிரம் வாக்கா ளர்களும் உள்ளனர். தற்போது அதிமுகவைச் சேர்ந்த பஞ்சம்மாள் நகராட்சித் தலைவராக உள்ளார். அதிமுக-13, திமுக-9, தேமுதிக-1, சுயே.-1 என கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக சார்பில் எஸ்.ஓ. ராமசாமி, பழனியம்மாள், அதிமுகவில் மகேந்திரன் ஆகியோர் ஏற்கெனவே நகராட்சித் தலைவர்களாக இருந்துள்ளனர்.

மீண்டும் நகராட்சியை கைப்பற்ற அதிமுகவும், அக்கட்சியிடம் இருந்து வெற்றியை பறிக்க திமுகவும் கடும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதிமுகவில் மீண்டும் நகராட்சி தலைவராக தற்போதைய தலைவர் பஞ்சம்மாள், முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன், உசிலம்பட்டி நகர் அதிமுக செயலாளர் பூமாராஜா உள்ளிட்ட பலர் முயற்சித்து வருகின்றனர். திமுகவில் உசிலம்பட்டி நகர் செயலாளர் தங்கமலைப்பாண்டி நகராட்சி தலைவர் வேட்பாளராக நிற்கப் போவது உறுதியாகி உள்ளது. இவர் தலைமையில் 24 வார்டுகளுக்கும் வேட்பாளர் தேர்வு முடிந்துள்ளது. இவரது மனைவி பழனியம்மாள் 2006-ம் ஆண்டில் நகராட்சித் தலைவராக வென்றார். அதிமுகவின் மோசமான நிர்வாகமே திமுகவின் வெற்றியை எளிதாக்கும் என்கிறார் திமுக செயலாளர் தங்கமலைப்பாண்டியன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பஞ்சம்மாளின் செயல்பாடு மோசமாக இருந்தது என்பதை அவரது கட்சியினர் அவர் மீது கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வைத்தே சொல்லிவிடலாம். 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதால், மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கழிவு நீரை வெளியேற்றுவதிலும், குப்பைகளை பாதுகாப்பாக சேகரிப்பதிலும் தோல்வியடைந்து விட்டார். அவரால் திறம்பட செயல்பட முடியாததால் வீடுகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் அதிகரித்துவிட்டது. மக்களும், வணிகர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் பேவர்பிளாக் சாலைகளை அமைத்துள்ளனர். உசிலம்பட்டிக்கென சிறப்பு நிதியை பெற்று, எந்த திட்டத்தையும் செயல்படுத்தாததால் மக்களின் ஆதரவை இழந்துவிட்டனர். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் போகிறோம் எனக்கூறி திமுகவினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரை மிரட்டுகின்றனர். இதையெல்லாம் மீறி, திமுக நகராட்சியை கைப்பற்றும் என்றார்.

நகராட்சி தலைவர் பஞ்சம்மாள் கூறியது: வைகையிலிருந்து நேரடியாக குடிநீர் கொண்டுவர உசிலம்பட்டிக்கு சிறப்பு நிதியாக ரூ.40 கோடியை முதல்வர் அறிவித்துள்ளார். விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படும். அப்போது தினசரி குடிநீர் கிடைக்கும். தலா ரூ. 90 ஆயிரம் நிதியில் 380 வீடுகளை பெற்றுத் தந்துள்ளேன். குப்பைகளை தரம் பிரித்து சுத்தப்படுத்த சிறப்பு நிதி பெறப்பட்டுள்ளது. சாலைகள் அமைக்கப்பட்டு தூசு இல்லாத நகராக உள்ளது. ரூ.1.20 கோடியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் ரூ.28 கோடியில் பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். பல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் சிலர் சதி செய்து கெடுத்துவிட்டனர். இது எல்லாம் மக்களுக்கு தெரியும் என்பதால் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார்கள்’ என்றார்.

அதிமுகவில் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்துதான் வெற்றியை முடிவு செய்ய முடியும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கணிசமான வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. நகராட்சி நிர்வாகம் மீது பலருக்கு அதிருப்தி இருந்தாலும், அதிமுகவை மக்கள் கைவிட மாட்டார்கள் என அக்கட்சியினர் நம்புகின்றனர். இந்த நகராட்சியில் பார்வர்டுபிளாக் கட்சிக்கு ஆதரவாளர்கள் கணிச மாக உள்ளனர். இவர்களின் ஆதரவு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவைதான் தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x