Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM
தமிழக முதல்வரின் மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட சூரியசக்தி உபகரணம் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) வெளியிட்டுள்ளது.
மரபுசாரா எரிசக்தியான சூரிய சக்தி, காற்றாலை மற்றும் உயிரித் தொழில்நுட்ப மின்சக்தியை அதி கரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் புதிய சூரியசக்தி மின் கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, மேற்கூரை சூரியசக்தி திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் ஒரு கிலோவாட் சூரிய மின்சக்தி திட்டத்துக்கு, மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்கும். இத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியத்தை தமிழக அரசு வழங்கும்.
அதாவது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோவாட் சூரியசக்தி திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.30 ஆயிரமும், தமிழக அரசு ரூ.20 ஆயிரமும் மானியமாக வழங்கும்.
இந்த திட்டத்தின் கீழ், சூரியசக்தி உபகரணங்கள் அமைக்கும் நிறுவனங்களை தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் தகுதியான நிறுவனங்களை எரிசக்தி முகமை தேர்வு செய்து, அதற்கான பட்டியலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
மொத்தம் எட்டு விதமான பிரிவுகளில் இந்த நிறுவனங்களின் பெயர்கள், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு கிலோவாட், இரண்டு கிலோவாட், ஐந்து கிலோவாட் மற்றும் 10 கிலோவாட் ஆகியவற்றுக்கான உபகரணங்களை ஐந்து வருட வாரண்டி மற்றும் ஐந்தாண்டு பராமரிப்புடன் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை, www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT