Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

3 பேரின் தூக்கு ரத்து: கருணாநிதி, தலைவர்கள் வரவேற்பு

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு வாழும் உரிமை கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

திமுக ஆட்சியின்போது, நான் எடுத்த முயற்சியாலும், விடுத்த வேண்டுகோள்களின் அடிப்படை யிலும் தூக்கு தண்டனையிலிருந்து விடுபட்ட தியாகு, கலியபெருமாள், நளினி ஆகியோரைப் போல, இன்றைக்கு தூக்கு தண்டனை யிலிருந்து விடுபட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகி யோருக்கு வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன். அவர்கள் விடுதலையானால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)

இந்தத் தீர்ப்பை மட்டற்ற மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-ன் படி, மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, மூவரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்)

மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த 3 தமிழர்களையும் காப்பாற்றியுள்ள இத்தீர்ப்பு நிம்மதியும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. இது நீதித்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பாகும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி இவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சில் நிம்மதியையும் ஆறுதலை யும் தந்துள்ள மகத்தான தீர்ப்பு இது.

கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)

பல ஆண்டுகள் சிறையில் கழித்துள்ள மூவரையும் விடுதலை செய்ய நீதித்துறை, உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டும். தமிழக அரசும் முக்கிய கவனம் செலுத்தி, அவர்களை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

இந்த மகத்தான தீர்ப்பின் மூலம் பல மரண தண்டனைக் கைதிகள் மரணத்தின் பிடியிலிருந்து விடுபட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.

குணங்குடி ஆர்.எம்.அனிபா (தமுமுக):

இத்தீர்ப்பை தமுமுக வரவேற் கிறது. தமிழக அரசு ஆளுநர் மூலம் இந்த மூவரையும் விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.சரத்குமார் (சமக)

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் வலியுறுத்தி வந்தோம். ஏறக்குறைய 23 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த மூவரையும் விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண் டியன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரும் இத்தீர்ப்பை வர வேற்றுள்ளனர். காந்திய மக்கள் கட்சியினர் இந்தத் தீர்ப்பை வரவேற்று, எழும்பூர் ரயில்நிலையம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

'மூவரும் குற்றவாளிகள் தான்: தமிழக காங்'

தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் விடுத்துள்ள அறிக்கை:

ராஜீவ் கொலையாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் அல்ல என்று எவரும் சொல்லவில்லை. தடா நீதிமன்றம் முதல், உச்ச நீதிமன்றம் வரை அளித்த தீர்ப்பில் அவர்கள் மூவரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட பிறகு, தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இவர்களின் கருணை மனுவே குற்றமற்றவர்கள் என்ற ரீதியில் அல்ல. தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்காக மனு அளித்தார்கள். ஆகவே, தமிழகத்தில் இதுபோல பிரச்சாரம் செய்கிற சிலர் தங்களது பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த மூவருக்கும் கண்ணீர் சிந்துகிற, கருணை காட்ட வேண்டும் எனக் கோருகிறவர்கள், ராஜீவ் காந்தி மற்றும் அவரோடு உயிர்நீத்த காவல்துறையினர் உள்பட 18 தமிழர்களின் குடும்பத்தை எண்ணிப் பார்த்து, அவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் மன நிம்மதி இருக்கும்’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x