Published : 27 Sep 2013 03:42 PM
Last Updated : 27 Sep 2013 03:42 PM
தமிழக அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திவந்த தொடர் போராட்டத்தை பார்வையற்ற பட்டதாரி மாணவர்கள் இன்று தற்காலிகமாகக் கைவிட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதல் இட ஒதுக்கீடு, பணி நியமனம் உள்ளிட்ட 9 அம்ச கோர்க்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த 12 நாட்களாக சென்னையில் போராட்டம் மேற்கொண்டனர். அவர்களில் ஒன்பது பேர், சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் தங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.
பார்வையற்ற பட்டதாரிகளிடம் பேச்சு நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் வளர்மதிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உண்ணாவிரதம் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளை சந்தித்து அமைச்சர் வளர்மதி பேச்சு நடத்தினார்.
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நேரில் சந்தித்து அவர் உறுதியளித்ததை அடுத்து, தங்கள் போராட்டத்தைக் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT