Published : 26 Jan 2014 12:42 PM
Last Updated : 26 Jan 2014 12:42 PM

சென்னை: போலி ஆவணம் தயாரித்து சிறுநீரகத்தை விற்க முயற்சி;2 பெண்கள்; 4 தரகர்கள் கைது

சென்னையில் உறவினர் என்று போலி ஆவணம் தயாரித்து சிறுநீரகம் விற்பனை செய்ய முன்ற 2 பெண்கள், 4 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், மேலப்பாளையம் சென்னி மலையைச் சேர்ந்தவர் பூபதி (42). நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி ஜெயமணி (38). சென்னை கொளத்தூர் தணிகாசலம் நகரை சேர்ந்தவர் நடராஜன் (40). இவரது மனைவி சந்திரா (35). ஜெயமணி மற்றும் சந்திரா ஆகிய இருவரும் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். அதனால், மாற்று சிறுநீரகத்திற்காக இருவரும் காத்திருந்தனர்.

இந்நிலையில், தண்டையார் பேட்டை பர்மா காலனியை சேர்ந்த தேவி (30) மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த சரஸ்வதி ஆகியோர் ரூ.2 லட்சம் பணத்திற்காக சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து ஜெயமணிக்கு, தேவியும், சந்திராவுக்கு சரஸ்வதியின் சிறுநீரகம் கொடுப்பது என முடிவு செய்யப் பட்டது.

சிறுநீரகத்தை பணத்திற் காக விற்கக்கூடாது என்ற சட்டம் உள்ளதால் இவர்கள் இருவரும் சிறுநீரகம் தேவைப் படுபவர்களுக்கு உறவினர்கள் என்பதைப் போன்று போலி ஆவணங்களைத் தயாரித்தனர்.

இந்த 4 பேரும் சிறுநீரகத்தை தானம் பெறுவது மற்றும் தானம் கொடுப்பது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த குழுவினர் கேட்ட கேள்விக்கு, 4 பேரும் முரண்பாடாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த குழுவினர் ஆவணங்களை சரிப்பார்த்தனர். அப்போது அவை போலி ஆவணங்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கீழ்பாக்கம் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீஸார் சிறுநீரகத்தை தானம் கொடுக்க வந்த தேவி, சரஸ்வதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி சிறுநீரக விற்பனை மோசடியில் ஈடுபட்ட புரோக்கர்களான தண்டையார் பேட்டையை சேர்ந்த சோபியா (30), கொருக்குப்பேட்டையை சேர்ந்த தேவி (33). ஓட்டேரியை சேர்ந்த கிரிஜா (43) மற்றும் சரஸ்வதியின் கணவர் ஜெயக்குமார் (43) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுநீரகத்தை பணம் கொடுத்து வாங்க இருந்த ஜெயமணி, சந்திரா மற்றும் சிறுநீரகத்தை விற்க முயன்ற தேவியின் கணவர் மணி ஆகிய 3 பேரையும் போலிஸார் விரைவில் கைது செய்ய உள்ளனர்.

சிக்கியது எப்படி?

இந்த கைது சம்பவம் குறித்து மருத்துவக் கல்வி இயக்கக (டிஎம்இ) இயக்குநர் (பொறுப்பு) வி.கனகசபை கூறியதாவது:

ஒருவரின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் செயலிழந்து விட்டால், அவருடைய நெருங்கிய உறவினர்கள் அதை தானமாக வழங்க முடியும். இதற்காக தனியாக உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் டி.எம்.இ இயக்குநர், துணை இயக்குநர், போலீஸ் இணை கமிஷனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டி.எம்.இ-யில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, இந்த குழு கூடும். அப்போது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை யில் உள்ள சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஒரு பகுதியை தானமாக பெறுபவர்கள் மற்றும் தானம் கொடுப்பவர்கள் ஆஜராவார்கள். தானம் கொடுப்பவர் உண்மையிலேயே நெருங்கிய உறவினரா என்பது பற்றி குழுவினர் விசாரணை நடத்துவார்கள். ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்படும்.

கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல டி.எம்.இ-யில் குழு கூடியது. அப்போது சிறுநீரகத்தை தானம் கொடுக்க வந்த 2 பெண்கள், விண்ணப்ப படிவத்தில் நெருங்கிய உறவினர் என்றும். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தானாகவே சிறுநீரகத்தை தானம் கொடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால், அந்த 2 பெண்களும் விசாரணையின் போது முன்னுக்குபின் முரண்பாடாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இறுதியில், இரண்டு பெண்களும் உண்மையான உறவினர் இல்லை என்பதும், பணத்திற்காக தங்களுடைய சிறுநீரகத்தை விற்க வந்துள்ளனர் என்று தெரியவந்தது. இதையடுத்து, குழுவின் சார்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கிட்னி விற்க முயன்று போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x