இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க பாம்பன் மீனவர்கள் கொழும்பு சென்றடைந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மன்னார் வளைகுடா நீர்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அருளானந்தம், மெல்வின், ராஜு, பத்ரிநாதன் ஆகியோரக்குச் சொந்தமான நான்கு விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களையும் கைது செய்தனர்.
அதன் பின்னர் மீனவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மூன்று முறை காவல் நீட்டிக்கப்பட்டு செப்டம்ப்ர் 23 அன்று புத்தளம் நீதிமன்றம் மீனவர்க்ளை விடுதலை செய்து உத்திரவிட்டது. ஆனால் 4 படகுகள் சார்ந்த விசாரணையை நவம்பர் 18 அன்று நீட்டித்து உத்திரவிட்டது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு மீனவர்களை தாயகத்திற்கு அனுப்பாமல் சுணக்கம் காட்டியது. இதனால் மீனவர்கள் கொழும்பில் ஒருநாள் உண்ணாவிரதம் விரதம் மேற்கொண்டனர்.
பின்னர் அக்டோபர் 2 அன்று ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திற்கு மீனவர்கள் 35 பேர் மட்டும் வந்து சேர்ந்தனர். மீனவர்களின் விசைப்படகுகள் கல்பிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விசைப்படகுகள் சார்ந்த மேல்விசாரணைக்கு புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு பாம்பன் மீனவர் நேசக்கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டஸ் தலைமையில் படகு உரிமையாளர்கள் 4 பேர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் 2 பேர் மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு சனிக்கிழமை இரவு போய் சேர்ந்தனர்.
நமது செய்தியாளரிடம் இலங்கையிலிருந்து பேசிய ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டஸ், திங்கட்கிழமை எங்களுடைய வழக்கு தான் புத்தளம் நீதிமன்றத்தில் முதலாவதாக வரும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னதாக கொழும்பு வெளிக்கடை சிறையில் போதைப் பொருட்கள் கடத்தியதாக பொய்யாகப் புணையப்பட்ட வழக்கில் இருக்கும் ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் 5 பேரை ஞாயிற்றுக்கிழஐம சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகளை அறக்கட்டளை சார்பில் செய்து கொடுத்தோம் என்றார்.
WRITE A COMMENT
Be the first person to comment